மோடிக்காக சுண்டு விரலை இழக்கலாமா?

செந்நீரை காணிக்கையாக கொடுத்து, மோடி வெற்றி பெறவேண்டுமென்று வேண்ட வந்தவர், பெருக்கெடுக்கும் செந்நீரை அப்படியே காணிக்கையாக பயன்படுத்தி, தனது சுண்டுவிரல் மீண்டும் இணையவேண்டும், அல்லது, புதிய சுண்டுவிரல் முளைக்கவேண்டும் என்று வேண்டியிருக்கலாமே? 😏

மெய்யியலின் அடிப்படைகளை பற்றிய தெளிவில்லாததால் இது போன்ற முட்டாள்தனமான செயல்கள் நிகழ்கின்றன!

🌷 காளியன்னை – நான் எனும் நமது தன்மையுணர்வைத் தவிர மீதமனைத்தும். அல்லது, அசையும் யாவும் / தோன்றி மறையும் யாவும் / படைக்கப்பட்டது யாவும்.

🌷 காணிக்கை – செந்நீரை காணிக்கையாக்குதல், உடலின் ஒரு பகுதியை காணிக்கையாக்குதல், தனது தலையை தானே வெட்டிக்கொண்டு, மொத்த உடலையும் காணிக்கையாக்குதல் என யாவும் “உடலை விட்டுவிடு” என்ற சொற்றொடரிலிருந்து தோன்றியவையாகும்.

🌷 “உடலை விட்டுவிடு” எனில் “நான் இவ்வுடல்” என்ற தவறான எண்ணத்தை விட்டுவிடுதலாகும். உடலை வெட்டிக்கொண்டு துன்புறுவதோ / மாண்டு போவதோ அல்ல!

oOo

திருவிழா சமயங்களில் எல்லா அம்மன் கோயில்களிலும், சமயபுரம் போன்ற புகழ் பெற்ற திருக்கோயில்களில் எப்போதும், உடலுறுப்புகள் பொறிக்கப்பட்ட வெள்ளீயத் தகடுகள் விற்கப்படும். அன்பர்கள் அவரவர் வேண்டுதல்களுக்கு ஏற்ப அத்தகடுகளை 

வாங்கி, உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துவர். 

இன்று, உடலிலுள்ள குறையோ, அல்லது, பிடித்திருக்கும் நோயோ நீங்குவதற்காக அம்மனிடம் வேண்டிக்கொண்டு, அது நீங்கிய பின்னர், அவ்வுறுப்பை குறிக்கும் தகடை வாங்கி காணிக்கையாக செலுத்திவிடுகின்றனர். ஆனால், இதற்காக தோன்றியதல்ல இவ்வினைமுறை (அசுரத்தில், சடங்கு)! தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்வதற்காக தோன்றியது. பின்னர் மருவி, “தனக்குத்தானே தண்டனை வழங்கிக் கொள்வதற்காக” என்று மாறியது. பிறகு இன்னும் மருவி, இன்று, மேற்கண்ட வேண்டுதலாகிவிட்டது!

தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளல் என்ற கணக்கில்:

🌷 கண்ணை கொடுத்தல் – புறமுகப் பார்வையை விட்டு விடுதல். அதை விட்டுவிட்டால், மீதமிருப்பது “நான்” எனும் தன்மையுணர்வு மட்டுமே.

🌷 நாக்கை கொடுத்தல் – பேசுவதை விட்டு விடுதல். அதாவது, பேசாமலிருத்தல்.

🌷 காலை கொடுத்தல் – நகர்வை / அசைவை விட்டு விடுதல். அதாவது, மனதை அசையவிடாதிருத்தல்.

🌷 கையை கொடுத்தல் – “செயலை செய்பவன் நான்” என்ற எண்ணத்தை விட்டு விடுதல்.

🌷 தலையை கொடுத்தல் – “நான் இன்னார்” என்ற எண்ணத்தை விட்டு விடுதல்.

oOo

என்ன நடக்கிறது என்பதை மிக சுருக்கமாக, அழகாக, எளிமையாக விளக்கியருக்கிறார் நம் முப்பால் முனிவர்:

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது

வாஅய்மை வேண்ட வரும் 

— திருக்குறள் #364

தூய்மை & வாய்மை ஆகிய இரு சொற்களும் உள்ளபொருளை (கடவுளை) குறிக்கும்.

வேண்டினால் வேண்டியது கிட்டும் (அதற்கான கூலியை கொடுத்த பிறகு). ஆனால், வேண்டாதிருந்தால் – அவா (ஆசை) அற்றிருந்தால் – மனதை அசைய விடாதிருந்தால்… நாமே உள்ளபொருளாவோம்!

“மோடி வெற்றி பெறவேண்டும்” என்று வேண்டினால் வேண்டியது நடக்கலாம். ஆனால், அப்படி வேண்டுவதினால் – அவா அடைவதால் – ஆசைப்படுவதினால் – மனதை அசைய விடுவதால் – நாம் மாசடைவோம். பகவான் திரு இரமண மாமுனிவர் போன்ற மாசற்ற ஒருவருக்காக நாம் மாசடையலாம். ஆனால், மாசே வடிவான ஒரு அரசியல்வியாதிக்காக நாம் மாசடைவது… ஒரு சூதாட்டத்திற்காக வாழும் வீட்டையே பந்தயப் பொருளாக்குவதற்கு இணையாகும்!!

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Leave a comment