Monthly Archives: May 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு – பாடல் #33: கனபொருள், அடிஇணை – சிறு விளக்கம்

கரத்தில் இனிய கனபொருளைத் தந்தும்
சிரத்தில் அடிஇணையைச் சேர்த்தும் – பரத்தும்
இகத்தும்அலை வாராமல் என்குருவாய் ஆண்ட
மகத்துமலை அண்ணா மலை

— #அண்ணாமலை #வெண்பா – #33

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

“அக வாழ்க்கையிலும், புற வாழ்க்கையிலும் தடுமாறாமல் இருக்கும் பொருட்டு இரண்டு பொருட்களை என்னிடம் கொடுத்து என்னைக் காப்பாற்றினார் பெருமதிப்பிற்குரிய எனது மெய்யாசிரியர் குகைநமச்சிவாயர் 🌺🙏🏽” என்கிறார் குரு நமச்சிவாயர் 🌺🙏🏽. அவை என்ன பொருட்கள்?

🔸சிரத்தில் அடிஇணையைச் சேர்த்தும் – தலையில் திருவடிகளை வைத்து என்பது நேரான பொருள்.

ஒரு முறை, பருமனான உடலைக் கொண்ட சற்று வயதான பெண் ஒருவர் பகவானின் 🌺🙏🏽 முன் 108 முறை விழுந்து வணங்க முற்பட்டார். அவரது சிரமத்தைக் கண்ட பகவான, “எதற்கு இந்த சர்க்கஸ் வேலை? பகவானின் உண்மையான திருவடி உனக்குள்ளே இருக்கிறது. அதை இறுகப் பிடித்துக் கொள்.” என்று அறிவுறுத்தினார்.

ஆக, திருவடி என்பது நம்முள்ளே இருக்கிறது – நான் என்ற தன்மையுணர்வே அது! அவ்வுணர்வில் நிற்பதே அதை இறுகப்பிடிப்பது!! இதுவே “அடிஇணையச் சேர்த்து” என்பது. இதுவே நிலைபேறு. மற்றதெல்லாம் அலைபேறு. 😊

🔸கரத்தில் இனிய கனபொருளைத் தந்தும் – புற வாழ்க்கையில் தடுமாறாமல் – ஆணவம் தலை தூக்காமல் இருக்க – ஒரு கனமான பொருளைக் கொடுத்திருக்கிறார் குகை நமச்சிவாயர். என்னவாக இருக்கும்?

எனது சிற்றறிவிற்கு 2 பொருள்கள் தோன்றுகின்றன:

1. திருவோடு – பிச்சையெடுத்து உண் என்று அறிவுறுத்தியிருப்பார். பகவானும் திரு முருகனார் சுவாமிகளுக்கு 🌺🙏🏽 இந்த அறிவுரையைக் கொடுத்துள்ளார். ஆடி மாதங்களில் அம்மனுக்கும், புரட்டாசி மாதங்களில் பெருமாளுக்கும் பிச்சையெடுப்பதின் உள்நோக்கம் ஆணவமழிப்பதே. ஆக, திருவோடு ஆணவத்தை அடக்கும் ஒரு கனமான பொருளானாலும், “இனிய” என்ற அடைமொழி திருவோட்டிற்கு பொருந்துமா? அடுத்த பொருளைப் பார்ப்போம்.

2. தமிழ் – ஆம். அன்னைத் தமிழ் ஒரு கனமான பொருளே!

தனது இழிந்த நிலையை எண்ணி கண்ணீர் சிந்தி, தற்கொலை செய்து கொள்ள முயன்ற அருணகிரிநாத சுவாமிகளை 🌺🙏🏽 தடுத்தாட்கொண்ட அவரது மெய்யாசிரியர் 🌺🙏🏽 (கோபுரத்து இளையனார் திருக்கோயில் இவரது சமாதி), மேற்கொண்டு அருணகிரிநாதர் நிலை தடுமாறாமல் இருக்க பயன்படுத்திய கனபொருள் – நமது நிறைமொழி! விளைவு: திருப்புகழ்!!

சமண மதத்தின் பக்கம் சாய முயன்ற பேரரசர் முதலாம் குலோத்துங்க சோழனைக் கட்டியிழுத்து நிலைபெறச் செய்து, அவரையும், சைவத்தையும், தமிழரையும் காப்பாற்றிய கனபொருள் தெய்வத் தமிழ்!! உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரிய கூத்தபிரான் 🌺🙏🏽 அடியெடுத்துக் கொடுத்து, சேக்கிழார் நாயனார் 🌺🙏🏽 பெற்றெடுத்த பெரியபுராணத் தமிழ்!!

புறவாழ்க்கையில் தடுமாறாமல் இருக்க குகை நமச்சிவாயருக்கு கொடுக்கப்பட்ட இனிய கனபொருள் “தன் நேர் இலாத” தமிழ் தான் என்பது எனது கருத்து! 🙏🏽 தமிழை முறையாக ஆறுமுக நாவலர், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, உவேசா, பரிதிமாற்கலைஞர், கதிரைவேற் பிள்ளை போன்ற திருவுடையோரிடம் கற்றாலே போதும் நிலைபேற்றினை அடைந்துவிடுவோம். (இன்று தமிழ்துறை பெரும்பாலும் இந்து சமய, சமூக, பாரத எதிரிகளால் நிறைந்திருக்கிறது. இவர்களிடம் தமிழ் கற்பதை விட கூகுளில் வடக்கிருக்கலாம். 😁)

🔸மகத்துமலை – மகத் என்ற ஆரியச் சொல் பெருமதிப்பிற்குரிய, மிக உயர்ந்த, வலிமையான, பெரிய போன்ற பொருள்களைத் தரும். மகான் என்ற ஆரியச் சொல்லும் இதிலிருந்துதான் வருகிறது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#கனபொருள்
#அடிஇணை

காசியில் இறப்பது, இராமாயணத்தின் நடு எழுத்துகள் ரா,ம – விளக்கம்

“ராம” என்ற பெயர்ச்சொல்லின் மேன்மையைக் கூறுவதற்காக இரு வெவ்வேறு செய்திகளை இணைத்து ஒரு பெட்டிச் செய்தியை உருவாக்கியிருக்கிறார்கள் (தினமலர் – ஆன்மிகமலர் – 03/04/2020)

#ராம என்பது மரா என்ற ஆரியச் சொல்லின் எதிர் உருவமாகும். மரா என்றால் இறப்பு. எனில், ராம என்பது இறப்பற்றதாகும். உடன், இனிமை, இன்பம், குதூகலம் போன்ற பொருள்களையும் குறிக்கும்.

🌷 “காசியில் இறப்பவர்களின் காதில் ராமநாமத்தை சிவபெருமானே ஓதுகிறார்”

🔥 கமலாலயத்தில் (திருவாரூர்) பிறக்க முக்தி
🔥 தில்லையைக் காண முக்தி
🔥 காசியில் இறக்க முக்தி
🔥 அண்ணாமலையை நினைக்கவே முக்தி

இவையனைத்தும் ஒன்றையே குறிக்கின்றன!

#காசி எனில் காசி மாநகரம் அல்ல. புருவ மத்தியும் அல்ல. காசி எனில் ஒளிமயமான இடம்! அறியாமை என்ற இருள் சிறிதும் இல்லாத இடம். மெய்ப்பொருளே அவ்விடம். (பொருள் எவ்வாறு இடமாகும்? துய்த்தால் தான் புரியும்! 😊) அவ்விடத்தில் இறப்பது என்பது நமது தனித்துவத்தை இழப்பது. “நான் இன்னார்” என்பதிலுள்ள இன்னார் தொலைந்து, நாம் நாமாக இருப்பது. இதுவே கமலாலயத்தில் பிறப்பது, தில்லையைக் காண்பது மற்றும் அண்ணாமலையை நினைப்பது!! (பகவான் திரு ரமணரது 🌺🙏🏽 வாக்கு)

காசியில் இறந்த பின்னர் – அறியாமை இருள் விலகிய பின்னர் – நான் என்ற தன்மையுணர்வை அடைந்த பின்னர், நாம் துய்ப்பது எல்லையில்லா, முடிவில்லா பேரின்பத்தை!! இந்தப் பேரின்பத்தையே “#ராமநாமம்” என்றும், இந்தப் பேரின்பம் தன்மையுணர்வை அடைந்த அடுத்த கணம் வெளிப்படுவதால், “சிவபெருமான் ஓதினார்” என்றும் உருவகப் படுத்தியிருக்கிறார்கள்.

🌷 “இராமாயணத்தை எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு மீதமிருந்த இரண்டு எழுத்துக்களை சிவபெருமான் எடுத்துக்கொண்டார்”

இதுவும் மேற்சொன்னது போலத்தான்!!

இங்கு இராமாயணம் குறிப்பது நமது பற்றுகளை – பற்றுகளால் நிறைந்த வாழ்க்கையை!! அனைத்தையும் விட்டால் தான் நிலைபேறு கிட்டும் – சிவமாக முடியும். சிவமானால் தான் ராமநாமம் உச்சரிக்க முடியும் – பேரின்பத்தை துய்க்கமுடியும். இந்த பேரின்பத்தை (ராமனை) சிவத்திலிருந்து (தன்மையுணர்விலிருந்து) பிரிக்கமுடியாது. எனவே தான், “மீதமிருந்த இரண்டு எழுத்துகளை சிவபெருமான் வைத்துக் கொண்டார்” என்று உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.

அனைத்து பற்றுகளையும் துறந்து, சிவநிலையை அடையும் போது தான் உணருவோம் “நாம் என்றுமே சிவம் தான்” என்று!! எனவே தான் சிவபெருமான் இராமாயண சுவடிகளையும், எழுத்துகளையும் பிரித்துக் கொடுத்தார் என்று உருவகப்படுத்தி இருக்கிறார்கள்.

“பற்றுகளை விடுவது”, “அனைத்தையும் துறப்பது” என்பது பாடுபட்டு பல காலம் சேர்த்ததை எல்லோருக்கும் தூக்கிக் கொடுத்து, நாமே நமக்கு நாமம் போட்டுக்கொள்வதல்ல! இதோ, இதற்கும் உள்ளது பகவானது அருமையான விளக்கம்: ஆத்மாவோடு அநாத்மாவை சேர்க்காமல் இருப்பதே துறவு!! 👌🏽👏🏽🙏🏽

“நான் இன்னார்” என்பதிலுள்ள நான் என்பது ஆத்மா, இன்னார் என்பது அநாத்மா – உயிரற்றது – நமது விருப்பு, வெறுப்பு, நம்பிக்கை, குறிக்கோள், அடையாளம் என அனைத்தும். இவற்றைத் துறந்தாலே போதும்.

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

வட பாரதத்திலிருந்து வந்த சமண, பௌத்த மொட்டைகள் காலத்திலிருந்து இன்றைய பகல் கொள்ளை… 🤭 மன்னிக்கவும்… மக்களாட்சி & உலகமயமாக்கம் வரை நாம் பறி கொடுத்தது & பறி கொடுத்துக் கொண்டிருப்பது ஏராளம்!! சாங்கியம், சடங்கு, சம்பிரதாயம், கடமை, நியாயம், தானம், தர்மம், உறவுகள், தீர்த்த யாத்திரை, மெக்காலே கல்வி, சொந்தக் காசில் சூனியம் (இட ஒதுக்கீடு, 100 நாள் திட்டம்), வழிப்பறி (வரிகள், எரிபொருள், நெடுஞ்சாலை சுங்கம்) 🥵… இவையெல்லாம் போதாது என்று இருக்கும் கோவணத்தை தேவர்கள், முனிவர்கள், அசுரர்களுக்கு பிரித்து தர வேண்டுமாம்!!

👊🏽 அனைத்தையும் துறந்தவர்களே முனிவர்கள். அவர்களுக்கு மேலும் எதற்கு?
👊🏽 முப்பத்து முக்கோடி தேவர்களில் பெரும்பாலானவை நுண்ணுயிரிகள் மற்றும் உடலையும் உலகையும் இயக்கும் தத்துவங்கள். இவைகளுக்கு ஏன் காசு தேவைப்படுகிறது?
👊🏽 அசுரர்கள் தான் இன்று அரசியல்வியாதிகளாக ஆட்சியில் உள்ளனர். சங்க நிதி, பதும நிதி தோற்றுப்போகும் அளவிற்கு பணம் வைத்திருப்பவர்களுக்கு எதற்கு இந்த சில்லறை?

மேற்சொன்ன முடி இறக்குதல், காது குத்துதல், காதுல பூ சேவைகள் எல்லாம் நடக்கும் என்பதாலோ என்னவோ துறவுக்கு, அருமையான துல்லியமான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் பகவான்!!

(பாலைவன மதங்களிலும் இதே கோவணத்தை உருவும் கதைதான்!! நம் சமயத்தில் நம்மவர்களின் கோவணத்திற்கு மட்டும் குறி வைப்பார்கள். பாலைவன மதங்களில், அவர்களது கோவணத்தை கையில் வைத்துக் கொண்டு, மற்றவர்களின் கோவணத்திற்கு குறி வைப்பார்கள். ஊரான் கோவணத்தை உருவுவதற்கு அவர்களுடைய டுபாக்கூர் கையேடுகளில் இருந்து மேற்கொள் வேறு காட்டுவார்கள்!! 😁)

அண்ணாமலை வெண்பா திரட்டு – பாடல் #32: மேன்மைபுனை, தோன்றாமலே ஒளிக்கும் – சிறு விளக்கம்

செகம்மருவும் ஐம்புலனில் சேராமல் ஞானச்
சுகம்மருவ மேன்மைபுனை தொண்டர் – அகம்மருவும்
தூயமலை வஞ்சகர்க்குத் தோன்றாம லேஒளிக்கும்
மாயமலை அண்ணா மலை

— #அண்ணாமலை #வெண்பா – #32

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸செகம்மருவும்…தூயமலை – உலகை விரும்பும் ஐம்புலன்களோடு சேராமல், மெய்யறிவு தரும் சுகத்தை அடைய முயலும் தொண்டர்களின் அகத்தை விரும்பும் எம்பெருமான். (இது பாடல் வரிகளுக்கான நேரடி பொருள்)

🔹ஞானம், மெய்யறிவு, நிலைபேறு, ஆன்மா எல்லாம் ஒரே மெய்பொருளையேக் குறிக்கின்றன. சுகம் எனில் இணக்கம். மெய்ப்பொருளுடன் இணக்கம். “ஞானச்சுகம் மருவ” எனில் “மெய்ப்பொருளுடன் இணைய விரும்பி” என்று பொருள்.

🔹மேன்மைபுனை – சிந்திக்க வேண்டிய சொற்கள்!! மேன்மை – மேலான, உயர்ந்த. ஒரு செயலின் விளைவு அழகுடன் நயத்துடன் இருந்தால் அச்செயல் புனைவு எனப்படும் (கவிதை புனைதல்). எனில், மேன்மைபுனை – மேன்மையான செயல் எது? வடக்கிருத்தல்!! இறைவனின் திருநாமத்தை சொல்வது முதல் தன்னாட்டம் வரை அனைத்துமே வடக்கிருத்தல் தான். #மேன்மைபுனை தான். ஏனெனில், இவற்றின் விளைவால் வெளிப்படும் மெய்யறிவே உண்மையான அழகாகும். எனவே தான் எம்பெருமான் சுந்தரன் 🌺🙏🏽 என்றும் அழைக்கப்படுகிறார்.

🔹அகம் மருவும் தூயமலை – அகம் – மனம். மருவும் – விரும்பும். இறைவன் விரும்பும் பொருள் திரும்புமா? கோவிந்தா தான்!! (#கோவிந்தா எனில் போனால் திரும்ப வராது ☺️) மெய்ப்பொருளுடன் இணைய வேண்டி, வடக்கிருக்கும் தொண்டர்களின் மனதை அழித்திடுவார் எம்பெருமான்.

🔸வஞ்சகர்க்குத் தோன்றாமலே ஒளிக்கும் மாயமலை – அனைவருள்ளிருந்தும் ஒளிர்வது மெய்ப்பொருளே. வஞ்சகர்கள் இதை உணர்வதில்லை. இந்த உண்மை அவர்களுக்குத் தோன்றுவது கூட இல்லை. இப்படி தோன்றாமலே ஒளிர்வது எப்படி நடக்கிறது? மாயை என்னும் இறையாற்றலால். மாயமலை.

நமக்கும் தான் இந்த உண்மை தோன்றுவதில்லை. நமக்குள்ளிருந்தும் தான் மெய்ப்பொருள் ஒளிர்கிறது. எனில், நாமும் வஞ்சகர்களா? 😛 ஆம். நாமும் வஞ்சகர்களே. இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டுவது, இல்லாத ஒருவனாகக் காட்டிக்கொள்வது, இருள் நிறைந்திருப்பது எல்லாம் வஞ்சகம் தான். இவற்றில் நம்மிடம் இல்லாதது எது? 😄

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#மேன்மைபுனை

அண்ணாமலை வெண்பா திரட்டு – பாடல் #31: “இருளும் அலை வாராமல் எப்போதும் காட்சி அருளுமலை” – சிறு விளக்கம்

துன்பப் பசிதீர்க்கும் சுத்த சிவஞான
இன்பப் பசும்தேன் இருக்குமலை – அன்பர்க்கு
இருளும்அலை வாராமல் எப்போதும் காட்சி
அருளுமலை அண்ணா மலை

— #அண்ணாமலை #வெண்பா – #31

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

#இருளும் #அலை வாராமல் எப்போதும் காட்சி அருளுமலை – எண்ணங்களே இருளும் அலை! கடல் அலைகள் போன்று ஓயாமலும், சற்று விட்டுவிட்டும் நம்மை வந்து தாக்குவதால் எண்ணங்களை அலை என்று அழைக்கிறார் குரு நமச்சிவாயர் 🌺🙏🏽. வந்து வந்து தாக்கி நம் மீது அறியாமை என்னும் இருளை மீண்டும் மீண்டும் போர்த்திவிட்டுப் போகின்றன.

இது எப்போது ஓயும்? பகவானின் 🌺🙏🏽 பதில்: கோட்டைக்குள் எத்தனை வீரர்கள் இருந்தால் என்ன? அவர்கள் வெளியே வர வர வெட்டிக் கொண்டே இருந்தால், ஒரு சமயம் கோட்டை நம் வசப்படும்.

எத்தனை பிறவிகளாக எவ்வளவு வினைகளை சேமித்து வைத்திருக்கிறோமோ? இவைத் தீரும் வரை என்ன செய்வது? எப்படி நம்மை காத்துக் கொள்வது?

வெளியே செல்லும் போது, காணக் கூடாத காட்சி ஏதேனும் நாம் முதலில் கண்டால், பிள்ளைகளை வேறுபக்கம் பார்க்கச் சொல்கிறோம். அதாவது, ஒரு தீய காட்சிக்கு தீர்வு… இன்னொரு நல்ல காட்சி! உலகு எனும் அறியாமை இருளுக்குத் தீர்வு சுத்த அறிவு ஒளியான மெய்ப்பொருள்!!

இருளானது அலையலையாகத்தான் நம்மைத் தாக்குகிறது. மெய்ப்பொருளோ எப்போதும் காட்சி கொடுத்து நம்மைக் காக்கிறது!!! எவ்வாறு?

நாம் எப்போதுமே நாமாகத்தான் – நான் எனும் தன்மையுணர்வாகத்தான் – இருக்கிறோம். இதை நாம் உணர்வதில்லை. நாம் ஒரு திரைக்கு சமம். நம் உடல் முதல் நாம் காணும் யாவும் திரையில் தோன்றும் காட்சிகளுக்கு சமம். இதே போன்று, கனவு, நனவு, தூக்கம் ஆகிய 3 நிலைகளும் நமக்கல்ல. மனதிற்குத்தான். இவையும் திரையில் தோன்றும் காட்சிகள் போன்றவைதான். நனவில், ஒரேயொரு முறை இறையாற்றல் காணும் காட்சியை விலக்கினால் போதும். நாம் யாரென்று உணர்ந்து கொள்வோம். நாமே தீயகாட்சிக்கு தீர்வான நல்ல காட்சி! நாமே எப்போதும் உள்ளபொருள்!!! நாமே எப்போதும் காட்சி தரும் அண்ணாமலை!!!

“கடவுளைக் காண்பது என்பது கடவுளை அறிவது. கடவுளை அறிவது என்பது கடவுளாய் ஆவது. கடவுளாய் ஆவது என்பது இருப்பது!! (To see God is to know God. To know God is to be God. To be God is to BE!!)(பகவான்/சாதுஓம் சுவாமிகள் 🌺🙏🏽) நம்மைக் காண்பது என்பது நாமாய் இருப்பது!!

நாம் யாரென்று உணர்ந்தபின் இருளும் அலையென்ன, இருளும் ஆழிப்பேரலையே வந்தாலும் புன்முறுவலுடன் எதிர்கொள்வோம்!! (அலை எனும் காட்சி தோன்றி திரையை நனைக்கவாப் போகிறது? ☺️)

oOOo

ஒருநாள், ஒரு அன்பர் பகவானிடம், ” பகவானே! உலகில் இவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் உள்ளனவே!” என்று கேட்டார். அதற்கு, பகவான், “ஆம். காண்பவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை உணர்த்தவே இந்த ஏற்றத்தாழ்வுகள்” என்று பதிலளித்தார்!! 👏🏽👏🏽👏🏽👌🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#இருளும்அலை

அண்ணாமலை வெண்பா திரட்டு – பாடல் #30: பிரான், வானவர், தேவர் – சிறு விளக்கம்

கண்டம் இருளக் கடுவிடத்தை வானவர்க்கா
உண்டுபிரான் ஆகி உதவுமலை – தொண்டர்
இணங்குமலை வானோரும் ஏனோரும் போற்றி
வணங்குமலை அண்ணா மலை

— #அண்ணாமலை #வெண்பா – #30

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

பிரான் என்று சொல்லை குரு நமச்சிவாயர் 🌺🙏🏽 பயன்படுத்திய விதம் சிந்திக்க வேண்டியது!

#பிரான் என்ற சொல்லுக்கு எல்லோருக்கும் இறைவன், அரசன், தலைவன் மற்றும் தந்தை ஆகிய பொருள்கள் உண்டு. இன்று பல தெய்வங்களைக் குறிக்க பயன்படுத்திக் கொண்டிருந்தாலும், ஆதியில் இது சிவபரம்பொருளை மட்டுமே குறிக்க பயன்படுத்தப்பட்டது.

🔹பிரான் ஆகி – எப்படி ஒருவர் பிரான் ஆக முடியும்? கொடிய விடத்தை வானவர்க்காக உண்டு.

🔹யார் #வானவர்? #தேவர்கள். முப்பத்து முக்கோடி தேவர்களில் பெரும்பாலானோர் நுண்ணுயிரிகளே!! நாம் இல்லாமல் இவ்வுலகு இயங்கும். ஆனால், நுண்ணுயிர்கள் இல்லாமல் இவ்வுலகு இயங்காது. மீதமுள்ளவை, உடலிலும் உலகிலும் இயங்கும் இயற்கை விதிகள் (ஈர்ப்பு விசை…), ஐம்பூதங்கள், பகலவன், நிலவு போன்ற கோள்கள். இவை எல்லாவற்றையும் சேர்த்தால் என்ன கிடைக்கும்? மொத்த உலகம்! 😊 வானவர்க்காக எனில் உலகுக்காக!! (மனிதர்களின் எண்ணிக்கை ஒரு பொருட்டே இல்லை. மொத்த உலக மக்கள் தொகையைவிட ஒரு கையளவு மண்ணில் அதிக நுண்ணுயிரிகள் இருக்கும்!)

🔹தன்னை பாதித்தாலும், தான் இறந்தே போனாலும் பரவாயில்லை என்று, தனது உலகுக்காக, கொடிய விடத்தைக்கூட அருந்தத் தயங்காதவரே பிரான் என அழைக்கப்பெறும் தகுதி பெற்றவர். இங்ஙனமே அரசன், தலைவன், தந்தை என விரித்துப் பொருள் கொள்ளலாம். (இவ்விதி இன்றைய ஆட்சியாளர்களுக்கு பொருந்தாது என்பது சிறு பிள்ளையும் அறிந்ததே. 😛)

🔹இவ்வளவு பாடுகளையும் பட்டு பிரான் நிலையை அடைவது எதற்காக? உதவுவதற்காக!! (“பிரான் ஆகி உதவுமலை”)

🔹யாருக்கு உதவுவதற்காக? தன்னை நாடி வரும் அன்பர்களுக்காக.

🌷”ஐயே! அதிசுலபம் ஆன்ம வித்தை” என்று ஊக்குவித்து,
🌷 “மனத்தின் உருவை மறவாது உசாவு” என்று வழிகாட்டி,
🌷”தானாயிருத்தலே தன்னை அறிதலாம்” என்று இருத்துவதற்காக!! (இருத்து – நிலைபெறு – நிலைபேறு)

(எல்லாம் பகவான் திரு ரமணரது 🌺🙏🏽 பாடல் வரிகள்!!)

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#பிரான்
#வானவர் #தேவர் #தேவர்கள்

பக்திக்கு தேவை குருட்டு நம்பிக்கை!! 😁

முதலில் வாட்ஸ்அப் வழியாக கிடைத்த பிட்:

ஆன்மிகத்தில் நுழைய முதல் தகுதி என்ன?

கண்ணபிரானும், அர்ஜுனனும் சென்று கொண்டிருந்தபோது, மேலே பறந்த பறவையை அது புறா தானே, என்றார் கண்ணன். அர்ஜுனனும் ஆம் என்றான். இல்லையில்லை….கழுகு மாதிரி தெரிகிறது, என்றார் கண்ணன்.ரொம்ப சரி…அது கழுகே தான், என்றான் அர்ஜுனன்.மைத்துனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை… என்றதும், அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான், கிளிதான் என்றுமூன்று முறை அடித்துச் சொன்னான் அர்ஜுனன். என்னடா நீ!நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே…!அது என்ன பறவை என தெளிவாகச் சொல், என்ற
கண்ணனிடம்,கண்ணா! என்பார்வையை விட உன்வார்த்தையில் எனக்கு நம்பிக்கைஅதிகம். மேலும், அந்தப்பறவையை நான் புறா என்று அடித்துச் சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட, உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்! நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப்பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே…! உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன், என்றான்.

பார்த்தீர்களா! பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! புராணங்களில் அப்படி சொல்லியிருக்கிறதே… இப்படி சொல்லியிருக்கிறதே… நம்புகிற மாதிரி இல்லையே… என்று வாதம் செய்தால், பக்தி என்ற ஏணியின், முதல் படிக்கட்டில் கூட காலை வைக்க முடியாது.

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !

oOOo

இது போன்ற கதைகள் ஆபத்தானவை! இப்படிப்பட்ட கதைகளை வைத்துத்தான் மோகன்தாஸ் முதல் அனைத்து இந்து எதிரிகளும் நம்மை அடக்கி, ஏமாற்றி, மோசம் செய்துள்ளனர். செய்து வருகின்றனர்.

குருட்டு நம்பிக்கைகளினால் விளைந்தவை தான் பாலைவன மதங்கள். நம் மண்ணில் விளைந்த சமயங்களும் மதங்களும் அறிவை அடிப்படையாகக் கொண்டவை.

நம்பிக்கை என்பது துய்ப்பினால், உள்ளுணர்வினால் ஏற்படவேண்டும். குருட்டுத்தனத்தினால் ஏற்படக்கூடாது. பகவான் திரு ரமணரும் 🌺🙏🏽, “நானே நேரில் தோன்றினாலும் நம்பாதே. உன் மீது மட்டுமே கவனம் செலுத்து.” என்கிறார்.

“அறம் செய்ய விரும்பு” என்று மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு, தான் மட்டும் பணம் செய்ய விரும்பும் ஆசிரியரின் நிலை ஒரு நாள் என்னவாகுமோ அது தான் இது போன்ற மூளைச்சலவை பிட்டுகளை கிண்டியவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

இவர்களால் நமது மதிப்பற்ற ரத்தினங்களும் மதிப்பிழந்து கொண்டிருக்கின்றன!! 😔

oOOo

தன்மையுணர்வில் அமிழ்ந்திருப்பதே பக்தி

— ஆதிசங்கரர் 🌺🙏🏽

தானாக இருப்பதே #பக்தி. ஒருவன் எப்போதுமே அந்த நிலையில் தான் இருக்கிறான். அவன் உணர்வதில்லை. எண்ணங்களற்று இருப்பதே பக்தி. அதுவே முக்தியும் (விடுதலையும்) கூட.

— பகவான் (அவரைத் தவிர வேறு யார் இவ்வளவு தெளிவாக, அழகாக விளக்கியிருக்க முடியும்!! 🌺🙏🏽)

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

oOOo

பி.கு.: அடுத்த முறை கிண்டும் போது அந்தந்தப் பகுதிகளில் தோன்றிய மாமுனிவர்களை, பெரியோர்களை, மன்னர்களை வைத்துக் கிண்டவும். இதே கதையை மறைஞான சம்பந்தர் – உமாபதி சிவாச்சாரியார், தாயுமான சுவாமிகள் – அவர்தம் மாணவர், குகை நமச்சிவாயர் – குரு நமச்சிவாயர், தத்துவராய சுவாமிகள் – தாண்டவராய சுவாமிகள் போன்ற மாமுனிவர்களை 🌺🙏🏽 வைத்து எழுதியிருந்தால் சற்று மதிப்பு கூடியிருக்கும்.

அண்ணாமலை வெண்பா திரட்டு – பாடல் #28: வாலமதி, வாலறிவு, வாலறிவன் – சிறு விளக்கம்

வால மதியை மவுலியின்மேல் வைத்தமலை
சீலமுனி வோர்கள் செறியுமலை – காலம்
கடந்தமலை சீறிவரும் காலனைக்கா லாலே
அடர்ந்தமலை அண்ணா மலை

— #அண்ணாமலை #வெண்பா – #28

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸சீல முனிவோர்கள் செறியும் மலை – ஒழுக்கம் நிறைந்த துறவியர்களால் நிறைந்த மலை. ஒழுக்கம் எனில் ஒழுங்கு, நல்லொழுக்கம் போன்ற பொதுவான பொருள்கள் அல்ல. “விட்டுக் கருதலின் ஆறு நெய் வீழ்ச்சி போல்” என்று பகவான் 🌺🙏🏽 பாடியது போன்ற ஒழுகலாறு! நான் என்ற தன்மையுணர்வை விட்டுவிட்டுக் கருதாமல், ஆற்றின் ஓட்டத்தைப் போல், உருக்கிய நெய்யின் வீழ்ச்சியை போல், விடாது கருதுபவர்கள் என்று பொருள்!!

🔸காலம் கடந்த மலை – நேரம், இடம் போன்ற யோசனைகள் எல்லாம் நமக்கே. இறைவனுக்கு அல்ல. அவர் எல்லாவற்றையும் தாண்டியவர். என்றும் இருப்பவர்.

🔸காலனைக் காலாலே அடர்ந்த மலை – திருக்கடவூர் மார்கண்டேய மாமுனிவரின் 🌺🙏🏽 வரலாறு. மரண பயம் போக்குதல். எனில், மெய்யறிவு வழங்குதல்.

🔸வால மதியை மவுலியின் மேல் வைத்த மலை – பிறைநிலவை தனது முடிமேல் வைத்திருப்பவர். சிவபெருமானின் (மெய்யறிவாளர்களின்) அடையாளங்களில் ஒன்று. #வாலமதி, #வாலறிவு, #வாலறிவன் (“கற்றதனால் ஆய பயனெனன்…” – திருக்குறள், திருவள்ளுவ நாயனார் 🌺🙏🏽) எல்லாம் அவர்களது உள்ள நிலையைக் குறிக்கும் சொற்களாகும். அது என்ன நிலை?

வா என்பது வெளியே வருவதைக் குறிக்கும். வால் என்பது ஒன்றிலிருந்து முளைத்த இன்னொன்றைக் குறிக்கும். முளைத்தது இல்லாமல் ஒன்று தனியாக இருக்க முடியும். ஆனால், அந்த ஒன்று இல்லாமல் முளைத்தது தனியாக இருக்க முடியாது. நாம் காணும் இவ்வுலகம் மெய்ப்பொருளில் இருந்து முளைத்தது. மெய்ப்பொருள் இல்லாமல் உலகம் இல்லை. ஆனால், உலகம் இல்லாமல் மெய்ப்பொருள் இருக்கும். இந்த உலகம் மெய்ப்பொருளில் இருந்து முளைப்பதை அறிந்தவரே வாலமதியன் – வாலறிவன் – மெய்யறிவாளன் – சிவபெருமான்!!

இந்த வாலமதி/வாலறிவு பலவிதமாக நமது சமயத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. சிலவற்றை இங்கு பார்ப்போம்:

🔹”நாம் காணும் இவ்வுலகம் நமக்குள் இருந்து தோன்றுவது” என்ற செய்தியை ஆன்மிக நூல்களில் படித்திருப்போம். சொற்பொழிவுகளில் கேட்டிருப்போம். இதன் சொந்தக்காரர் #ஜம்பு #மாமுனிவர் 🌺🙏🏽. #திருச்சி #திருவானைக்கா திருத்தலத்தில் மூலவருக்கு கீழ் சமாதியாகி உள்ளார். இவர் உணர்ந்து வெளியிட்டதை தலவரலாற்று சிற்பமாக, ஓவியமாக அத்திருத்தலத்தில் பல இடங்களில் வைத்திருப்பார்கள். அதில், மாமுனிவர் கூப்பிய கைகளுடன் அமர்ந்திருப்பார். அவரது தலையிலிருந்து ஒரு நாவல் மரம் வெளிப்பட்டிருக்கும். மாமுனிவர் – மெய்ப்பொருள். நாவல் மரம் – காணப்படும் உலகம். (சிற்பத்தில் மீதமிருக்கும் விடயங்கள், மெய்யறிவு கிடைத்த பின்னரும் நடக்கும் போராட்டத்தைக் குறிக்கும்.)

🔹அடுத்து, பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாள் 🌺🙏🏽. பெருமாள் படுத்திருக்கும் பாம்பணை, அவரை சுற்றியிருக்கும் அன்னையர், முனிவர்கள், கருடன், அனுமன் என அனைவரையும் ஒதுக்கிவிட்டு, பெருமாளையும் அவர் தொப்புளிலிருந்து முளைத்துள்ள நான்முகனை மட்டும் எடுத்துக் கொள்வோம். இப்போது, பெருமாள் மெய்ப்பொருளாவார். அவரிடமிருந்து முளைத்துள்ள தாமரையில் அமர்ந்திருக்கும் நான்முகன் உலகமாவார். ஜம்பு மாமுனிவர் நாவல் மரமாக சித்தரித்ததை, வைணவர்கள் தொப்புள்கொடி நான்முகனாக சித்தரித்துள்ளனர்.

🔹உமையன்னை நடனமாடுவது போன்றும், சிவபெருமான் காண்பது / வடக்கிருப்பது போன்றும் உள்ள ஓவியங்களும் இதே வாலறிவைத் தான் குறிக்கின்றன.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#வாலமதி #வாலறிவு #வாலறிவன்
#திருவானைக்கா #ஜம்பு_மாமுனிவர்
#ஜம்புலிங்கேஸ்வரர்

#மாதொருபாகன் – திரு உண்ணாமுலையம்மன் இறைவனின் #இடப்பாகம் பெற்ற பழங்கதையின் உண்மைப் பொருள்!!

🔸பழங்கதை

ஒரு சமயம், திருக்கயிலையில் இறைவனும், இறைவியும் வீற்றிருக்கும் போது, இறைவி விளையாட்டாக இறைவனின் கண்களை கணப்பொழுது மூடினார். அந்த கணப்பொழுதில் உலகை இருள் சூழ்ந்தது; உயிர்கள் எல்லாம் வாடிப் போயின. இதனால், இறைவியும் பூவுலகில் பிறக்க வேண்டியதாயிற்று. இதையெண்ணி இறைவி வருத்தப்பட்டாலும், செய்த குற்றத்திற்கான தண்டனையை துய்த்துத்தான் ஆக வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். முதலில், காஞ்சி மாநகரையடைந்து, மண்ணால் சிவஅடையாளத்தை உருவாக்கி, வழிபட்டு, வடக்கிருந்து வந்தார். சில காலம் சென்ற பின், அவரது முயற்சிகளில் மகிழ்ச்சியடைந்த இறைவன் அவர் முன் தோன்றி, அவரை வாழ்த்தி, திருவருணை சென்று வடக்கிருக்க அறிவுருத்தினார். இறைவியும் திருவருணை வந்து, கெளதம மாமுனிவரின் 🌺🙏🏽 குடிலில் தங்கினார். அவரிடம் அண்ணாமலையாரின் பெருமையைக் கேட்டறிந்தார். அவரது உதவியுடன் மலைவலம் வந்தார்; அவரது அறிவுரையின்படி பவளக்குன்றில் வடக்கிருந்தார். ஒரு கார்த்திகை திங்கள் விளக்கீடு திருநாளன்று, இறைவன் தோன்றி, தனது இடப்பாகத்தை தந்தருளி, மாதொருபாகனாக காட்சியளித்தார்!! 🌺🙏🏽

oOOo

ஒரே கதைக்குள் பல செய்திகளை பதிவு செய்திருப்பார்கள். தத்துவம், வரலாறு, மருத்துவம், உடலியக்கம், வானவியல் என பல செய்திகள் இருக்கும்.

🔸இந்தக் கதையை தத்துவரீதியாக அணுகும் போது…

🔹திருக்கயிலாயத்தில் இறைவனும் இறைவியும் வீற்றிருத்தல் என்பது நிலைபேற்றினைக் குறிக்கும். பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 போன்ற மெய்யறிவாளர்களின் உள்ள நிலையை குறிக்கும்.

🔹இறைவனின் கண்களை இறைவி விளையாட்டாக மூடியதால்… – மெய்யறிவு பெற்ற பின்னும் வெகு எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். இல்லாவிட்டால், மீண்டும் உலக வாழ்க்கைக்குள் (பூவுலகில் பிறப்பது) சிக்கிக் கொள்ள வேண்டும். இப்படி சிக்கிக் கொண்டால், மீண்டும் ஆரம்பத்திலிருந்து வரவேண்டியிருக்கும்.

🔹முதலில், உடல் முதலானவற்றைப் பேணவேண்டும் (காஞ்சிபுரம் – மண் தலம் – உடல் முதலானவை. “மண்ணினாய விகாரமும் மண்ணே” – கண்ணபிரான் 🌺🙏🏽).

🔹பிறகு, பேணியவற்றை ஒதுக்கித் தள்ள வேண்டும் (திருவருணை – நெருப்பு – எரித்தல். “கற்றவை யாவற்றையும் ஒரு நாள் மறக்க வேண்டியிருக்கும்” – பகவான்).

🔹அடுத்து, மெய்யாசிரியரைத் தேடியடைந்து, கடைத்தேறும் வழியை அறிந்து கொள்ள வேண்டும் (கௌதம மாமுனிவரிடம் அண்ணாமலையாரின் பெருமையைக் கேட்டறிதல்)

🔹பின்னர், மெய்யாசிரியர் காட்டிய வழியில் நம்பிக்கையுடன், உறுதியுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் (பவளக்குன்றில் இறைவி வடக்கிருந்தது. உலகியலில் ஈடுபடும்போது, உடல் என்பது “சோறிடும் தோல் பை” என்றாகிறது. மெய்யியலில் ஈடுபடும்போது அதே உடல் பவளக்குன்றாகிறது!)

🔹முடிவில், மீண்டும் மெய்யறிவு கிட்டும் (இறைவனின் இடப்பாகம், இறைவன் திருவடி, கயிலாய பதவி… என எல்லாம் இதுவே!!)

🔸கதையை வரலாற்று ரீதியாக அணுகும் போது…

(இறைவனின் கண்களை இறைவி மூடியதிலிருந்து பூவுலகு வருவது வரை விலக்கிவிட்டு, இறைவி காஞ்சிக்கு வருவதிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.)

உலகம் திரையில் தோன்றும் காட்சி போன்றது. திரை-அசைவற்றது-சிவம். காட்சி-அசைவது-சக்தி-இறைவனின் ஆற்றல். ஆதாரமான திரைக்கு வலப்பகுதியையும், அதில் தோன்றும் காட்சிக்கு இடப்பகுதியையும் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்கள். அணு முதல் அண்டம் வரை ஆராய்ந்து இம்முடிவுகளை எடுத்துள்ளனர். இந்த ஆராய்ச்சி முதலில் காஞ்சிபுரத்தில் நடந்திருக்கவேண்டும். பின்னர், திருவருணையில் முடிவு பெற்றிருக்கவேண்டும்.

கதையில், கெளதம மாமுனிவர் இடம் பெறுவதால், இந்த ஆராய்ச்சியில் அவரது பங்களிப்பு உள்ளது என்று கருதலாம்.

(இங்கு, இறைவி என்பது ஒரு சீவனையும் குறிக்கும்; பல சீவர்களையும் குறிக்கும். அதாவது, ஆராய்ந்தவர் தனி நபராகவும் இருக்கலாம். ஒரு குழுவாகவும் இருக்கலாம்.)

oOOo

எல்லாம் பகவான் திருவடிக்கே!! 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

#அர்த்தநாரி #அர்த்தநாரீஸ்வரர் #கௌதமர் #கௌதம_மகரிஷி

அண்ணாமலை வெண்பா திரட்டு – பாடல் #25 – “முன்நின்று முக்தி வழங்குமலை” – சிறு விளக்கம்

(அண்ணாமலையார் திருப்பாதம் 🌺🙏🏽, திருவண்ணாமலை உச்சி)

ஆதி நெடுமால் அயன்காண அன்றுபரஞ்சோதிச் செழும்சுடராய்த் தோன்றுமலை – வேதம்முழங்குமலை சிந்திப்பார் முன்நின்று முத்திவழங்குமலை அண்ணா மலை

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸நெடுமால் அயன் – மாயோன் & நான்முகன். அடிமுடிக் காணா அண்ணாமலை படலம். மாயோன் – அகந்தை/செல்வம். நான்முகன் – புத்தி/கல்வி. கல்வியாலும் செல்வத்தாலும் இறைவனை அடைய முடியாது என்று பொருள் கொள்ளலாம். அல்லது, புத்திக்கும் அகந்தைக்கும் அப்பாற்பட்டவர் இறைவன் என்று பொருள் கொள்ளலாம்.

🔸வேதம் முழங்குமலை – வேதம் என்ற ஆரியச் சொல்லின் சரியான பொருள் அறிவு. ஆனால், பொதுவான பொருள் மிக உயர்ந்த ஆன்ம அறிவு. இடைக்காட்டு சித்தர் (அண்ணாமலையார்) 🌺🙏🏽 முதல் இன்று வரை எண்ணற்ற மாமுனிவர்களை ஈர்த்து வைத்துக் கொண்ட தலம் திருவண்ணாமலை. இங்கு ஆன்ம அறிவு முழங்காமல் வேறெங்கு முழங்கும்? பகவான் திரு ரமணரின் 🌺🙏🏽 “நான் யார்?” என்ற 2 இரத்தினங்கள் போதுமே! கண்ணபிரான் 🌺🙏🏽 அமர்ந்த தராசுத் தட்டை, தான் வைத்த ஒரு துளசி இலையால் அன்னை ருக்மணி மேலெழுப்பியது போல், ஆரிய திருமறை நூல்கள் அனைத்தையும் ஒரு தட்டில் வைத்தாலும், பகவானது “நான் யார்?” என்ற 2 இரத்தினங்கள் போதும் தராசை சமமாக்க!! 💪🏽

🔸சிந்திப்பார் முன்நின்று முத்தி வழங்குமலை –

🔹முதலில், முக்தி (விடுதலை) என்றால் என்ன? பகவானது பதில்: “பந்தத்தில் இருக்கும் தான் யாரென்று விசாரித்து தனது யதார்த்த சொரூபத்தை தெரிந்து கொள்வதே முக்தி!”

🔹அடுத்து, பற்று (பந்தம்) என்றால் என்ன? உடலல்லாத நாம், நம்மை அழியும் உடலாக எண்ணிக் கொண்டிருப்பதே பற்று.

🔹இந்த பற்று எப்போது விலகும்? அதிபக்குவிகளாக இருந்தோமானால் மெய்யாசிரியரின் அறிவுரையைக் கேட்ட உடனே விலகிவிடும். இல்லையெனில், ஒரு சிறிய வெள்ளோட்டம் காட்டினால் தான் விலகும்.

🔹இந்த வெள்ளோட்டத்தை யார் காட்ட முடியும்? இறைவன் தான்!!

சரியான சமயம் வரும் போது, நாம் காணும் காட்சிகள் யாவும் மறைந்து நாம் நாமாக இருப்போம்!! 😍 இந்த ஒரு துய்ப்பில் அனைத்தும் புரிந்து போகும். 😌 இதுவரை கண் முன்னே காட்சிகளைக் காண்பித்த அதே ஆற்றல், இப்போது அவற்றை மறைத்து நம்மை – நான் என்ற தன்மையுணர்வை – நமக்கு காட்டுகிறது. இதைத் தான் “முன்நின்று முத்தி” என்று குரு நமச்சிவாயர் 🌺🙏🏽 பாடியுள்ளார்!!

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

#அண்ணாமலை #வெண்பா – #25 #குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#முக்தி

அண்ணாமலை வெண்பா திரட்டு – பாடல் #24 – நீலகண்டன், தியாகராஜர், தாராதேவி – சிறு விளக்கம்

ஓலம்இடும் தேவர்குழாம் உய்யத் திருமிடற்றில்
ஆலவிடம் தன்னை அடக்குமலை – நாலுமறை
அந்தமலை நாயேனை ஆளக் குருவாகி
வந்தமலை அண்ணா மலை

— #அண்ணாமலை #வெண்பா – #24

🔸நாலுமறை அந்தமலை – நான்கு மறைநூல்கள் முழுவதிலும் பலவிதமாக போற்றிப் பாதுகாக்கப்படும் பொருள் அந்த  சிவப்பரம்பொருளே.

🔸ஓலமிடும் … அடக்குமலை – ஆமை திருவிறக்கக் (கூர்ம அவதாரக்) கதையில் வரும் நிகழ்வு. (இதை விளக்குவதற்கு தனி நூலே வேண்டும்! முதன் முதலில் படிப்பவர்களால் சிறிதும் நம்பமுடியாது!! கோபம் & வெறுப்பு கூடத் தோன்றலாம்!!!)

🔹ஆமை – புலனடக்கம்
🔹மந்தார மலை – மெய்யாசிரியர் காட்டிய வழி/உத்தி
🔹வாசுகி பாம்பு – நமது மூச்சுக்காற்று
🔹உள்ளே செல்லும் உயிர்வளி – தேவர்கள்
🔹வெளிவரும் கரியமிலம் – அசுரர்கள்
🔹கடையப்படும் கடல் – நமது உடல்
🔹ஆலகால விடம் – நிர்விகற்ப சமாதி
🔹அன்னை பார்வதி – சமாதியிலிருந்து வெளிவரச் செய்யும் ஆற்றல்
🔹அன்னை தாரா – சமாதி துய்ப்பைத் திரும்ப திரும்ப நினைவு கூறச் செய்யும் ஆற்றல்

புலனடக்கத்துடன் ஆன்ம பயிற்சியில் ஈடுபடும் போது, அவரவர் முன்வினைப்படி, பல சித்திகள் முதலில் கைகூடும். இவையெல்லாம் வெறும் விடம் தான். தொடர்ந்து முன்னேறினால் நிர்விகற்ப சமாதி கைகூடும். இதுவே ஆலகாலம் எனப்படும் கொடிய விடமாகும்!!

(தாகத்திற்காக தண்ணீர் கேட்டுவிட்டு, பல ஆண்டுகள் நிர்விகற்ப சமாதியில் இருந்து விட்டு, வெளிப்பட்டவுடன் ஒரு முனிவர் கேட்ட கேள்வி: தண்ணீர் எங்கே? ☺️ அதாவது, மனம் இறக்கவில்லை!! எனவே தான் இந்த சமாதி கொடிய விடம் எனப்பட்டது.)

நிர்விகற்ப சமாதியில் ஒருவர் (முனிவர் என்று கொள்க) இருக்கும் போது, அவரிடம் மீதமிருக்கும் பற்று ஏதேனும் ஒன்றை வைத்து, மாயை அவரை வெளியேத் தள்ள முயலும். இந்த மகாமாயையே பெருமானின் கழுத்தைப் பிடித்து, விடம் இறங்காமல் காத்த அன்னையாகிறார். மாயை முயன்றாலும், முனிவர் விரும்பினால் மட்டுமே வெளிவருவார். “சரி, விட்டுத்தான் கொடுப்போமே. இந்த பற்றையும் முடித்து விட்டு திரும்பவோமே.” என்று விட்டுக் கொடுப்பார். உலக வாழ்க்கைக்கு திரும்புவார். “உலகம் காப்பாற்றப்பட்டது” என்பது இதுவே.

தனது பேரின்ப நிலையை விட்டுக் கொடுத்ததால் முனிவர் தியாகராஜர் ஆகிறார். ஆனால், இந்த துய்ப்பு அவரை விட்டகலாது. அதே சமயம், அவரது உடலின் இயக்கத்தைப் (உலக வாழ்க்கையை) பாதிக்காது. எனவேதான் விடம் கழுத்துடனே நின்றது என்றார்கள். இந்நிலையில் அவர் நீலகண்டன் எனப்படுகிறார். உலக வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகும் தனக்கு கிடைத்த துய்ப்பை அடிக்கடி நினைவில் கொள்வார். இந்த செயலை செய்யத் தூண்டும் ஆற்றலே அன்னை தாரா எனப்படுகிறார்.

பகவான் திரு ரமணரும் 🌺🙏🏽 திரும்ப திரும்பக் கூறும் அறிவுரைகளில் ஒன்று: உன் சொரூபத்தை நினைவில் கொள்!!

பேயாரும் 🌺🙏🏽 இறைவனிடம் வைக்கும் இறுதி வேண்டுகோள்: உன்னை என்றும் மறவாதிருக்க வேண்டும்!!

கருணாகர முனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#ஆலகாலம் #ஆலகால #நஞ்சு #நீலகண்டன் #தியாகராஜர்
#தாராதேவி #அன்னை #தாரா
#நிர்விகற்ப #சமாதி
#ஆமை #திருவிறக்கம்
#கூர்ம #அவதாரம்