Monthly Archives: June 2020

அண்ணாமலை வெண்பா திரட்டு – பாடல் #50 – புன்தலை – சிறு விளக்கம்

புன்தலையின் மாயன் புவிஇடந்தும் காணரிய
நன்றிதரும் பொன்னடியை நாடியே – என்றும்ஒரு
நாளும்அலை வாராமல் நாயேனைச் சற்குருவாய்
ஆளுமலை அண்ணா மலை

— #அண்ணாமலை #வெண்பா – #50

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸புன்தலையின் மாயன் புவிஇடந்தும் காணரிய

புன் தலை – புள் தலை – புள் போன்று முடி உள்ள தலை – பன்றித் தலை. திருமால் பன்றிப்பெருமாளாக இறங்கி வந்து, மண்ணைப் பறித்து, ஒளிப்பிழம்பாக நிற்கும் திரு அண்ணாமலையாரின் (லிங்கோத்பவ உருவம்) திருப்பாதங்களைக் காண முயற்சித்து தோல்வியுற்ற கதை. இது சைவர்களுடையது. இக்கதையில்,

🔹பன்றிப்பெருமாள் – நமது ஆணவம்

🔹மண் – நமது உடல்

🔹மண்ணைப் பறித்தல் – அக முகமாக தேடுதல்

🔹அண்ணாமலையார் – பிறப்பும் இறப்பும் அற்ற மெய்ப்பொருள் (அடிமுடி காணா அண்ணாமலை)

இனி, வைணவக் கதை. நான்முகனின் மூக்கிலிருந்து ஒரு சிறு பன்றி தோன்றும். பின்னர், அது வானளாவ வளரும். வளர்ந்த பன்றிப் பெருமாள், கடலுக்குள் சென்று, இரண்யாட்சனுடன் ஆயிரமாண்டுகள் போரிட்டு, முடிவில் அவனைக் கொன்று, பூமியன்னையை மீட்டு வருவார்.

🔹நான்முகன் – மெய்யாசிரியர்

🔹சிறு பன்றி – ஆசிரியரிடமிருந்து வெளிப்படும் அறிவுரை. எ.கா.: “நான் யார்?” – பகவான் திரு ரமணர் 🌺🙏🏽. முதலில் இரு சொற்களாக மட்டும் தோன்றும் இந்த அறிவுரை, பின்னர் நம்மை முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்ளும்!! சிறு பன்றி வானளாவ வளர்ந்தது என்பது இதுவே.

🔹இரண்யகசிபு – இக்கதையில், நமது உடல். சிங்கப் பெருமாள் கதையில், ஆணவம்.

🔹இரண்யாட்சன் – நம் புறமுகக் கண்ணோட்டம்.

🔹கடல் – இங்கு, நமது அறியாமை இருள். மீன் திருவிறக்க கதையில், நமது உடல். ஒவ்வொரு கதையையும் தனித்தனியாக அணுக வேண்டும். ஒப்பிட்டுப் பார்த்தால் குழப்பமடைவோம்.

🔹பூமியன்னை – “நாமே உள்ளபொருள் (மெய்ப்பொருள்)” என்ற மெய்யறிவு.

மொத்தக் கதையும் நமக்குள் நிகழ்கிறது. பல்லாயிரம் பிறவிகளாக நாம் வளர்த்து வைத்திருக்கும் புறமுகக் கண்ணோட்டத்தை (நாம் ஒர் உடல், நாமிருப்பது பூகோளத்தில், …) மாற்றுவதென்பது அவ்வளவு எளிதான செயலல்ல. பல காலம் போராட வேண்டியிருக்கும். இதைத்தான், “பெருமாள் 1000 ஆண்டுகள் போரிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். கதையின் படி, மெய்யாசிரியரிடமிருந்து பெற்று வரும் அறிவுரை, நமது புறமுக கண்ணோட்டத்தை அழித்து, மெய்யறிவை வெளிக்கொணருகிறது. இது தவறு.

எவ்வளவு போரிட்டாலும் நமதுண்மையை நாம் உணரமுடியாது. இறையாற்றல் தான் நாம் யாரென்று நமக்கு உணர்த்தியருள வேண்டும். “ஒரு முறையாவது தனது உண்மையை உணர்ந்தால் தான் மனமடங்கும்” என்பது பகவானது வாக்கு. இதை சைவக் கதையில் சரியாக பதிவு செய்திருப்பார்கள். வெகு காலமாக, ஆழமாக மண்ணைப் பறித்தும் பெருமாள் தோற்றுப் போவார். தனது இயலாமையை அவர் உணர்ந்தவுடன், சோதிப் பிழம்பிலிருந்து இறைவன் வெளிப்பட்டு அருள்புரிவார்.

🔹மண்ணைப் பறித்தல் – நம்முள் அகமுகமாக தேடுதல். வடக்கிருத்தல்.

🔹தோல்வியை ஒப்புக் கொள்ளுதல் – இயலாமையை உணர்தல் – ஆணவம் அடங்குதல்.

🔹இறைவன் தோன்றுதல் – மெய்யறிவு வெளிப்படுதல். காலம் கனிந்தவுடன், இறையாற்றல் நமது உடலையும் உலகையும் சிறிது நேரம் மறைத்துவிடும். உடலும், உலகமும் மறைந்த அந்த கணம் நாம் யாரென்று உணர்ந்து விடுவோம். இதுவே மெய்யறிவு!!

(பல கதைகளில், “இறைவன் தோன்றி, அருள் புரிந்துவிட்டு மறைந்தார்” என்று தான் படித்திருப்போம். “தோன்றிக் கொண்டேயிருந்தார்” என்று படித்திருக்கமாட்டோம்! “தோன்றி மறைந்தார்” என்பது உண்மையில், “நமது உடலையும் உலகையும் சிறிது நேரம் மறைத்துவிட்டு, பின்னர், மீண்டும் தோற்றுவித்தார்” என்பதாகும்!! )

மீண்டும்… “புன்தலையின் மாயன் புவிஇடந்தும் காணரிய” எனில் “எவ்வளவு பாடுபட்டாலும், போராடினாலும் அகந்தையால் அடைய முடியாத” என்பதாகும்.

🔸நன்றிதரும் பொன்னடியை

மெய்யறிவு கிடைத்தவுடன் ஒரு பேரமைதி உண்டாகும். பெருமகிழ்ச்சி தோன்றும். குளுமைத் (சீதை) தோன்றும். குருநமச்சிவாயர் 🌺🙏🏽 இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்து நன்றி உணர்ச்சியும் தோன்றும் என்கிறார். கடும் வெயிலில் அலைந்து விட்டு, ஒரு குளுமையான நிழல் பகுதிக்கு வந்தவுடன் அப்பாடி/அம்மாடி/கடவுளே என்றிருக்கும். அந்த உணர்வில் நன்றியும் கலந்திருக்கும். இது போன்றொரு உணர்வு, மெய்யறிவு வெளிப்பட்டவுடன் ஏற்படுகிறது என்பதை உணர்ந்து, “நன்றி தரும்” என்ற சொற்களாக வடித்திருக்கிறார் ஆசிரியர்.

🔸அலை வாராமல் – எண்ணங்கள் தோன்றாமல்

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#பன்றிப்பெருமாள்
#பன்றித் #திருவிறக்கம்
#புன்தலை
#வராக #அவதாரம்

உண்ணாமுலை (அம்மன்) என்பது யார்? அல்லது, உண்ணாமுலை என்றால் என்ன?

🔸 அம்பிகை உண்ணாமுலை அம்மைக்கு உகந்த வாம மலை

அண்ணாமலை வெண்பா திரட்டின் 49வது பாடலில் வரும் இச்சொற்றொடரைப் பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

இது இரண்டு பொருள்களைத் தரும்:

– அம்மைக்கு பொருத்தமான/பிடித்தமான அழகு அப்பன்
– அம்மைக்கு பொருத்தமான/பிடித்தமான இடப்பாகம்

முதலில், உண்ணாமுலை என்பது யாரென்று பார்ப்போம்.

ஆழ்ந்த உறக்கத்திலிருந்து முழு விழிப்பிற்குள் 5 நிலைகள் இருப்பதாக பகவான் திரு ரமணர் 🌺🙏🏽 கூறுகிறார்: 1. உறக்கம், 2. எண்ணங்களற்ற நிலை, 3. எண்ணங்களற்ற நிலையை உணர்வதால் ஏற்படும் மகிழ்ச்சி, 4. வினைப்பதிவுகளின் கலப்பு மற்றும் 5. விழிப்பு.

நான்காவது நிலை கஷாயம் (எண்ணங்கள்) எனப்படும். இந்நிலையில் இருப்போரே கஷாயம் – காவி – தரித்தவர் எனப்படுவர். காவி உடை உடுத்துபவரல்லர். தாங்கள் உடலல்லர் என்பதை படிப்பறிவாக அறிந்தவர்கள். ஆனால் துய்ப்பு பெறாதவர்கள். அதற்காக பாடுபடுபவர்கள். உலகியலில் இருக்கும் ஏனையோருக்கும் இவர்களுக்கும் உள்ள வேறுபாடு இந்த படிப்பறிவு தான். மற்றவர்களுக்கு தெரியாது; தெரிந்து கொள்ளவும் ஆர்வமிருக்காது. இவர்கள் தெரிந்து கொண்டு, அதை நோக்கி பயணிப்பவர்கள்.

மூன்றாவது நிலை ரசவாதம் எனப்படும். சாதாரணமாக “ரசவாதம் அறிந்தவர்” எனில் “இரும்பை தங்கமாக்கத் தெரிந்தவர்” என்று நமக்கு நாமம் போட்டிருப்பார்கள். இது தவறு. எனில், எண்ணங்களற்று இருக்க தெரிந்தவர் – மெய்யறிவாளர் – என்பது ஒரு பொருள். தன்னிடம் வருவோரை மெய்யறிவாளராக மாற்றக்கூடியவர் என்பது இன்னொரு பொருள். உலகறிவு – இரும்பு. மெய்யறிவு – தங்கம். பகவான் திரு ரமணர் ஒரு சிறந்த ரசவாதியாவார். தனது பார்வையாலேயே பலரை தங்கமாக்கியுள்ளார். அவரது சொற்கள் இன்று வரை பலரை தங்கமாக்கிக் கொண்டிருக்கின்றன.

இரண்டாவது நிலையே உண்ணாமுலையாகும். விழிப்பு நிலையிலிருந்து பின்நோக்கி செல்லும் போது இதுவே இறுதி நிலை. இந்த நிலையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு நுணுக்கமாக நமது மாமுனிவர்கள் ஆராய்ந்துள்ளனர். அவ்வுயர் ஆராய்வுகளின் முடிவுகள் தாம் உண்ணாமுலை, மீனாட்சி, விசாலாட்சி போன்ற, நமது சிந்தனையைத் தூண்டக் கூடிய மிகச்சிறந்த பெயர்களும் உருவங்களுமாகும்!! 😍 அன்னை மீனாட்சியின் திருக்கரத்தில் உள்ள கிளியைப் பற்றி சிந்தித்தாலே பகவான் போன்ற மெய்யறிவாளர்கள் எப்படி இவ்வுலகில் இயங்குகிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

இந்த உண்ணாமுலை நிலையை அடைவதே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்று பகவான் அறிவுருத்தியுள்ளார்.

oOOo

இது வரை உண்ணாமுலை என்ற சொல்லை ஒரு தனி மனித கணக்கில் பார்த்தோம். அடுத்து, படைப்பு என்று வரும்போது, மொத்த படைப்பும் உண்ணாமுலை அம்மை தான். இயங்கிக் கொண்டே இருப்பவர் (அண்டம் எங்கே நிற்கிறது? மாறிக்கொண்டே இருக்கிறதல்லவா!). அழகானவர் (இயற்கையில் இல்லாத அழகா!). இவர் எப்படி இயக்கமே இல்லாத, சுடுகாடுடைய அப்பனுக்கு பொருத்தமானவர் என்று குருநமச்சிவாயர் பாடுகிறார்?

வெகு வேகமாக சுழலும் ஒரு பம்பரத்தைக் காணும் போது, அது சுழல்வது தெரியாமல், அப்படியே நிற்பது போல் காட்சியளிக்கும். ஒரு மெய்யறிவாளரின் நிலை இப்படிப்பட்டது தான் என்கிறார் பகவான். அப்பனுக்கு சதாசிவம் என்றொரு பெயருண்டு. சதா + சிவம் – எப்பொழுதும் சிவநிலையில் இருப்பவர். சிவநிலை – தன்னிலை. தானாய் இருத்தலே தன்னிலை. இருத்தல் என்பது இடைவிடாத, ஓயாத (சதா) செயலாகும். எனவே, இயங்கிக் கொண்டேயிருக்கும் அம்மைக்கு ஓயாத செயலில் இருக்கும் அப்பன் உகந்தவராகிறார்!

அடுத்தது, அழகு. இச்சொல்லுக்கு அழுக்கற்றது, மலமற்றது என்ற பொருள்களும் உண்டு. அழுக்கற்றது எனில் சுத்தம். மெய்ப்பொருளை விட சுத்தமான பொருள் உண்டா? ஆகவே, மெய்ப்பொருள் அழகானதும் கூட. இதனால் தான் அப்பன் “சுந்தரன்” என்றும் அழைக்கப்படுகிறார். எனவே, அழகான அம்மைக்கு அழகான அப்பன் உகந்தவராகிறார்.

oOOo

வாமம் என்ற சொல்லை அழகு என்ற பொருளில் மேலே பார்த்தோம். இனி, இடது என்ற பொருளில் பார்ப்போம்.

(அம்மை இடப்பாகம் பெற்ற வரலாறு. ஏற்கனவே இருமுறை பார்த்துள்ளோம். மீண்டும் நினைவு கூறுவோம்.)

நம் மாமுனிவர்கள் அணு முதல் அண்டம் வரை ஆராய்ந்து, மாறாத மெய்ப்பொருளுக்கு வலது புறத்தையும், மாறிக்கொண்டே இருக்கும் இயற்க்கைக்கு இடது புறத்தையும் கொடுத்தார்கள். இது தொடர்பான முதற்கட்ட ஆராய்ச்சிகள் காஞ்சிபுரத்தில் இருந்த மாமுனிவர்களால் நடத்தப்பட்டது. பின்னர், திருவருணையில் இருந்த மாமுனிவர்களால் தொடரப்பட்டு, முடிவுகளும் எய்தப்பட்டன.

இதனால் தான், “அம்மை, முதலில் காஞ்சிபுரத்தில் வடக்கிருந்து, பின்னர் அதை திருவருணையில், கெளதம மாமுனிவரின் வழிகாட்டுதலில் தொடர்ந்து, இறுதியில் இடப்பாகம் பெற்றார்.” என்று தலவரலாறுகளில் பதிவு செய்யப்பட்டது. கெளதம மாமுனிவரின் பெயர் வெளிப்படையாக இருப்பதால், இந்த ஆராய்ச்சியில் அவர் பெரும் பங்காற்றியுள்ளார் என்பது தெளிவாகிறது.

oOOo

இவையெல்லாம் நமது மண்ணும், இனமும், சமயமும் எவ்வளவு பழமையானவை, பண்பட்டவை, மேம்பட்டவை என்பதற்கும், நமது பெரியோர்கள் எவ்வளவு தூரம் அறிவிற்சிறந்து விளங்கினார்கள் என்பதற்குமான சின்னஞ்சிறு ஆதாரங்களாகும். தொடர்ந்த படையெடுப்புகளாலும், சரியான ஆட்சியாளர்கள் இல்லாததாலும் “மெய்ப்பொருள் காண்பதறிவு” என்ற உயர்ந்த நிலையிலிருந்து “பகுத்தறிவு” என்ற தாழ்ந்த நிலைக்கு வந்துவிட்டோம். மீண்டும் அவ்வுன்னத நிலைக்கு திரும்ப முடியாவிட்டாலும் இருப்பதையாவது போராடிக் காப்போம். திருவருள் நமக்குத் துணை புரியட்டும்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

இந்த இடுகையிலுள்ள செய்திகள் எதுவும் நமக்கு பெரிதில்லை. பரங்கியர்கள் இல்லை. அவர்களது தலையில் ஆப்பிள்கள் விழவில்லை. எந்த பரங்கியும் குளியல் தொட்டியிலிருந்து “யுரேகா” என்று கத்திக்கொண்டு பிறந்தமேனியாக ஓடவில்லை. ஆண்டுக்கு சுமார் “12 லட்சம் கோடிகள்” சம்பாதிக்கும் “தொழிற்”நிறுவனம் எந்த பரங்கியையும் சிறை வைக்கவில்லை, உயிருடன் எரிக்கவில்லை. பாரத நாட்டிற்கு வந்தேயிராத ஒரு பரங்கி, வந்ததாகவும் கொல்லப்பட்டதாகவும் குறிப்பில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக காப்பிரைட், லெஃப்ட், டாப், பாட்டம், சைடு, சந்து என்று எதுவுமில்லை. இவை எதுவுமில்லாமல் இவையெல்லாம் கண்டுபிடிப்புகளா? பகுத்தறிவு கண்ட தமிழா ஏமாந்துவிடாதே!! 😁

oOOo

கண்டுபிடிப்பு என்றால் என்ன?

பரங்கியர்கள், பாரதம் போன்ற பழம்பெருமை வாய்ந்த நாடுகளுக்கு சென்று, சுட வேண்டியதை சுட்டு, சுட்டதை இலத்தீன் கிரேக்க மொழிகளால் மறைத்து, காப்புரிமை பெற்று, சுட்ட நாட்டினரிடமே, உள்ளூர் கருங்காலிகளின் துணையுடன், அதை விற்று, கொள்ளை காசு சம்பாதித்து, தவறாமல் ஜி.எஸ்.டி கட்டிவிட்டு, மீதமாகும் சில்லறையில், ஹவாய் கடற்கரையில் புட்டி, குட்டிகளுடன் மேற்கொண்டு அடுத்த கண்டுபிடிப்பு (சுடுவது) பற்றி சிந்திப்பது.

👊🏽🤜🏽👊🏽🤛🏽👊🏽👊🏽👊🏽💪🏽😌

#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#உண்ணாமுலை #அபீதகுஜாம்பாள்
#வாமமலை
#இடப்பாகம்

அறிவில்லாத பத்திமை முட்டாள்தனமானது! பத்திமை இல்லாத நோன்பு என்பதே கிடையாது!!

(தினமலர் – ஆன்மிகமலர் – 12/06/2020)

#பக்தி என்ற ஆரியச்சொல்லை #பத்திமை என்று தமிழில் மாற்றியிருக்கிறார் திருமங்கையாழ்வார். இதிலிருந்து வருவது தான் #பத்திமன் (#பக்தன்).

oOOo

💥 பத்திமை இல்லாத அறிவு பொருளற்றது

சரி தான்! ஆனால், சொற்றொடர் முழுமையாகவில்லை. அறிவில்லாத பத்திமை என்னவாகும் என்பதையும் உடன் சேர்த்திருந்தால் முழுமை பெற்றிருக்கும்!

ஒரு கற்பனைக் கதை.

ஒரு ஊருக்கு தன்னையுணர்ந்த முனிவர் ஒருவர் வருகை தந்தார். நல்ல கல்வியறிவு (மெக்காலே கல்வியல்ல 😉) பெற்ற ஒருவரும், கல்வியறிவு இல்லாத ஒருவரும் அவரை சந்தித்து அறிவுரை கூறுமாறு கேட்டுக்கொண்டனர். இருவருக்கும் அவர் “கிடா வெட்டு” என்று அறிவுறுத்தினார்.

முதலாமவர் அவர் சொன்னதை புரிந்து கொண்டு, மனதையழிக்க தனக்கேற்ற வழியை தெரிந்துகொண்டு, அவ்வழிச் சென்று பிறவிப் பெருங்கடல் கடந்தார்.

இரண்டாமவர் தனது வீட்டிற்குத் திரும்பி, தனது குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தாரிடமும் உறவினரிடமும் முனிவர் சொன்னதைக் கூறி, அருகில் உள்ள மாரியம்மன் கோயிலில், தனது புடை சூழ, கிடா வெட்டி, அனைவருக்கும் விருந்து படைத்தார். இதனால் அந்த பகுதியே திருவிழா கோலம் பூண்டது போலானது. ஊரில் அவரது மதிப்பு பெருகியது. வருமானமும் பெருக ஆரம்பித்தது. அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக நடத்தினார். மேலும் உயர்ந்தார். அவரைப் பார்த்து மற்றவர்களும் கிடா வெட்ட ஆரம்பித்தார்கள். திருக்கோயிலின் புகழ் பரவியது. அப்பகுதியின் பொருளாதாரமும் உயர்ந்தது. தமிழ்நாடு சிலை திருட்டு துறை திருக்கோவிலுக்குள் நுழைந்தது. அதன் பிறகு நடக்க வேண்டியதெல்லாம் நடந்தது! 🤭

சில காலமாயிற்று. அவரது வாழ்வில் நல்வினைத் தீர்ந்து, தீவினை ஆரம்பித்தது. வருமானம் குறைந்தது. உடலை நோய் தாக்கியது. மனைவி இறந்தார். ஒரு சமயத்தில் கிடா வெட்டு நிகழ்ச்சியை அவரால் நடத்த முடியாமல் போயிற்று. இன்னமும் தாழ்ந்தார். இயலாமையும், வெறுப்பும் சேர்ந்தது. கிடா வெட்டு விழாவை இகழ்ந்தார். சமய சடங்குகளின் மீதிருந்த நம்பிக்கையை இழந்தார். சமூக அநீதி காக்கும் கூட்டத்திடம் போய் சேர்ந்தார். கூவஞ்சட்டை அணிய ஆரம்பித்தார். வளர்த்த மகளை மணந்துகொண்டார். (👊🏽👊🏽👊🏽😌) அதோ கதியானார்.

இவ்வளவுக்கும் காரணம் முனிவரின் “கிடா வெட்டு” என்ற அறிவுரை!! இதுவே, “மனதை அழி” என்று அவர் நேரடியாக அறிவுறுத்தியிருந்தால், இரண்டாமவரின் அடுத்த கேள்வி, “அப்படின்னா என்ன சாமி?” என்று இருந்திருக்கும். இந்த ஒரு கேள்வி அவரை பிறவிப் பெருங்கடலையே கடக்க வைத்திருக்கும்!

ஆக, அறிவில்லாத பத்திமை முட்டாள்தனமானது!!

💥 பத்திமை இல்லாமல் மேற்கொள்ளும் நோன்பு பலனளிக்காது.

முதலில் #நோன்பு என்றால் என்ன என்று பார்ப்போம்.

நோன்பு (ஆரியத்தில், #விரதம்) எனில் விலகியிருத்தல். எதிலிருந்து விலகியிருத்தல்? புற வாழ்க்கையில் இருந்து விலகியிருத்தல். எனில், அகத்திலேயே தங்கியிருத்தல். எனில், தன்மையுணர்வை விடாது பிடித்திருத்தல். இந்நிலையே ஆரியத்தில் உபவாசம் எனப்படும். உப+வாசம் – அருகில்+இருத்தல். எதனருகில்? இறையுணர்வின் அருகில். இறையுணர்வும் தன்மையுணர்வும் ஒன்று தான். எனில், நோன்பும் அருகிலிருத்தலும் (உபவாசமும்) ஒன்று தான்!

தன்மையுணர்வின் அருகில் இருத்தல், அதைப் பிடித்திருத்தல், அதில் மூழ்கியிருத்தல், தானாய் இருத்தல் என எல்லாமே ஒன்று தான். இந்நிலைக்கே பத்திமை என்று பெயர்!!

“தன்மையுணர்வில் ஆழ்ந்திருப்பதே பத்திமை” – ஆதிசங்கரர் 🌺🙏🏽

“எண்ணங்களற்று இருப்பதே பத்திமை!” – பகவான் ரமணர் 🌺🙏🏽 (தன்மையுணர்வில் நிற்கும்போது எண்ணங்களற்றுப் போகும்)

ஆக, நோன்பு என்பதே பத்திமை தான்!! இதில் “பத்திமை இல்லாமல்” எப்படி நோன்பிருப்பது?

oOOo

எல்லோருக்கும் கூட்டம் வேண்டும் – சார்ந்திருக்க. ஆனால், அந்த கூட்டத்திடம் தனது தொழிலைப் பற்றிய அறிவு சற்று குறைவாக இருக்க வேண்டும். தான் சொல்வதை, செய்வதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டும். கேள்விகள் கேட்கக் கூடாது. சார்ந்திருந்தாலும் தன்னை உயர்வாக நினைக்க வேண்டும்.

அனைத்து மதத்தினரிடமும், அனைத்து துறையினரிடமும் இதே மனநிலை தான் உள்ளது. வீடு கட்டிப் பாருங்கள். வீட்டிற்கு வர்ணம் பூசிப் பாருங்கள். வீட்டிலுள்ள மராமத்து வேலைகளை செய்து பாருங்கள். கிராமத்திற்கு சென்று உழவு செய்து பாருங்கள். எல்லோரிடமும் இதே மனநிலையைக் காணலாம். எல்லோருக்கும் நாம் வேண்டும். நமது பணம் வேண்டும். ஆனால், அந்தத் துறையைப் பற்றிய அறிவு மட்டும் நம்மிடம் இருக்கக்கூடாது!! இப்படியே, “எனக்கு ஒரு நீதி. மற்றவர்களுக்கு ஒரு நீதி.” என்று எல்லோரும் கிளம்பினால் என்னவாகும் உலகம்? 😔

இந்த மனநிலைக்கு காரணம்? அளவுக்கு மீறிய மக்கள் தொகை, இதனால் ஏற்படும் பற்றாக்குறை, இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆட்சியாளர்கள்!!

மன்னன் கோன்முறை அரசு செய்தால் தான், குறைவிலாது உயிர்கள் வாழும்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

அண்ணாமலை வெண்பா திரட்டு – பாடல் #48 – சிறு விளக்கம்

நன்றிபுனை நண்பன் நமச்சிவா யன்தினமும்
துன்றுமலர் தூவித் துதிக்குமலை – அன்றுஇருவர்
தேடுமலை சந்ததமும் தில்லைச்சிற் றம்பலத்தே
ஆடுமலை அண்ணா மலை

— #அண்ணாமலை #வெண்பா – #48

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸நன்றிபுனை நண்பன்

திரு சுந்தரமூர்த்தி நாயனாரின் 🌺🙏🏽 வாழ்வும் வாக்கும் குருநமச்சிவாயரை 🌺🙏🏽 வெகுவாக பாதித்திருக்கவேண்டும். அவரைப் போன்று, தனது மெய்யாசிரியரான குகைநமச்சிவாயரை 🌺🙏🏽 எம்பெருமானது நண்பராகக் கண்டு மகிழ்கிறார்!

சைவர்கள் அனைவருமே திரு சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் திரு விறன்மிண்ட நாயனாருக்கும் 🌺🙏🏽 என்றென்றும் கடன்பட்டவர்களாவோம். இவ்விருவரும் இல்லையெனில் நாயனார்கள் பற்றிய செய்திகள் கிடைத்திருக்காது. தமிழ்-சைவ-ஆன்மிகப் பேழையான பெரியபுராணமும் உருவாகியிருக்காது. பகவான் திரு ரமணருக்கு 🌺🙏🏽 பேரமைதி கிடைத்திருக்காது. ஏக்கமும் தோன்றியிருக்காது, (பெரியபுராணம் படித்த பின், சில நாட்களுக்கு, ஒரு பேரமைதி பகவானை ஆட்கொண்டிருந்தது. “அந்த நாயனார்களுக்குத் தோன்றிய பத்திமை போல் நமக்கு எப்போது தோன்றப்போகின்றது?” என்ற ஏக்கமும் அவரைக் குடி கொண்டிருந்தது.)

சைவர்கள் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு கடன்பட்டவர்களானால், தமிழர்கள் அனைவரும் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு 🌺🙏🏽 என்றென்றும் கடன்பட்டவர்களாவார்கள். பெருமான் தோன்றி தனது திருப்பணிகளை செய்திருக்காவிட்டால், வடக்கிலிருந்து வந்த சமண-பெளத்தர்களுடன் வந்த ஆரியம் எங்கும் பரவி, ஆழ வேரூன்றி, புதராக மண்டித் தமிழன்னையை அழித்திருக்கும். இதனால் தான், வள்ளற்பெருமான் 🌺🙏🏽 திருவாசகம் தந்த மணிவாசகப் பெருமானை தனது மெய்யாசிரியராகக் கொண்டாலும், தனது தமிழாசிரியராக சம்பந்தப் பெருமானைக் கொண்டார்.

🔸துன்றுமலர்

துன்று – அருகே, நெருங்கிய. இரு கைகள் நிறைய பூக்களை அள்ளி திரு அண்ணாமலையார் மீது தூவி, துதிப்பாராம் குகைநமச்சிவாயர்!

படிக்கும்போது அடடா 😍 என்று தோன்றும். இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். 😁 உலகின் மீது அக்கறையுள்ளோர் (உலகும் இறைவனும் ஒன்று தான்) முதலில் தவிர்க்க வேண்டியது பூக்கள் தாம்! உழவுத்தொழிலில் மிக அதிகமாக நச்சுமருந்துகள் பயன்படுத்தப்படுவது பூக்கள் சாகுபடியில் தாம். எவ்வளவு பூக்களை பயன்படுத்துகிறோமோ, அவ்வளவு தூரம் சுற்றுப்புறச் சூழலை கெடுக்கிறோம்.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்

அண்ணாமலை வெண்பா திரட்டு – பாடல் #47 – சிறு விளக்கம்

நேசிக்கும் அன்பர் நினைவுகொடு பாவித்துப்
பூசிக்கும் பூசை பொருந்துமலை – ஆசைக்குள்
வீழுமலை பற்றுஒழிந்த மெய்அடியார் நெஞ்சகத்தில்
வாழுமலை அண்ணா மலை

— #அண்ணாமலை #வெண்பா – #47

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸நேசிக்கும் … பொருந்துமலை

பூசை என்பதே பாவிப்பது தானே! எப்படிப்பட்ட பூசை பெருமானுக்கு பொருந்துமாம்? நமது நினைவை அவருக்கு கொடுப்பது போன்று பாவித்து செய்யப்படும் பூசை தான் பொருந்துமாம். நினைவு என்றால் என்ன? எண்ணம். எண்ணத்தைக் கொடுப்பது என்றால் என்ன? எண்ணாமையே! எண்ணாது இருப்பதே எண்ணத்தைக் கொடுப்பது!! எண்ணாமல் இருந்தால் என்னவாகும்? நிலைபேறு கிட்டும். ஆக, நிலைபேறு கிட்ட – பெருமானை அடைய – செய்யவேண்டியதெல்லாம் எண்ணாமல் இருப்பதே – நினைவைக் கொடுப்பதே!!

(பூசை என்பது பூஜை என்ற ஆரியச் சொல்லில் இருந்து வருவதாக பலரும் கருதுகின்றனர். இது தவறு. வடக்கிலிருந்து முதன்முதலில் ஆரியத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்த சமண-பௌத்தர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்: பூஜை என்பது பூ+வை மற்றும் பூசு ஆகிய தமிழ் சொற்களிலிருந்து உருவாக்கப்பட்டது!! அதாவது, இந்து சமயத்திலுள்ள திருத்தல வழிபாட்டின் அடிப்படைகளான பூஜிப்பது, அர்ச்சனை செய்வது, திருநீறு/மஞ்சள்/சந்தனம் பூசுவது போன்ற வழிபாட்டு முறைகளின் தாயகம் தமிழகமாகும்!!! இன்னும் சற்று ஆராய்ந்தால் மொத்த இந்து சமயமும், இந்து கலாச்சாரமும் தமிழர்களுடையது தான் என்பதை நன்கு உணரலாம்.)

🔸ஆசைக்குள் வீழுமலை

ஆசைகளற்று இருக்க வேண்டும் என்ற ஆசையுள்ள அன்பனின் அறியாமையைப் போக்கி, “நீ ஆசைபட்ட பொருள் நீயே” என்று உணர்த்தி விட்டு அடங்கி (விழுந்து) விடுகிறது இறையாற்றல். இதையே, மிக அழகாக, “ஆசைக்குள் வீழுமலை” என்ற 2 சொற்களாக்கியிருக்கிறார் ஆசிரியர்!! 👌🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#பூசை #பூஜை

காடுவெட்டி சோழ மன்னனுக்கு காட்சி கொடுத்த திரு சொக்கநாதப் பெருமான்!! 🌺🙏🏽

🌧️ நேற்று வாட்ஸப்பில் கிடைத்த காணொளியின் சாரம்:

காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு #காடுவெட்டி #சோழன் என்ற மன்னர் ஆண்டு வந்தார். சிறந்த சிவபத்திமர். ஒருநாள் அவருக்கு மதுரையம்பதியான திரு சொக்கநாதப் பெருமானைக் காணவேண்டும் என்ற ஆவல் பெருகிற்று. பெருமான் குடியிருப்பதோ அவரது எதிரி நாட்டுக்குள்! தவித்துக் கொண்டிருந்த மன்னரின் கனவில் தோன்றிய பெருமான், மன்னரை மாறுவேடம் பூண்டு பாண்டிய நாட்டிற்கு சென்றுவர அறிவுறுத்துகிறார். அவ்வாறே சென்ற மன்னரை, வெள்ளப்பெருக்கு எடுத்த வைகைநதி குறுக்கிடுகிறது!!

மன்னர் செய்வதறியாமல் திகைத்து கொண்டிருந்த நேரம், இறைவனே ஒரு சித்தர் வடிவம் தாங்கி வந்து, மன்னர் ஆற்றைக் கடக்க உதவி செய்து, திருத்தலத்திற்கு அழைத்துச் செல்கிறார். நடுநிசியாகி விட்டது. ஊர் அடங்கி இருந்தது. வடக்குவாசல் கதவைத் திறந்து, மன்னரை உள்ளே அழைத்துச் சென்று, சொக்கநாதப் பெருமானை கண் குளிர காண வைத்து, திரும்பவும் வடக்கு வாசல் வழியாக வெளியே அழைத்து வந்து, வைகையாற்றை மீண்டும் கடக்க வைத்து, காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வைக்கிறார். இவ்வளவும் செய்த சித்தர், வடக்கு வாசல் கதவைப் பூட்டி முத்திரை வைக்கும்போது கயல் முத்திரையை வைக்காமல் சிவன்காளை முத்திரையை வைத்துவிடுகிறார்!

மறுநாள் காலை கதவுகளை திறக்க முயற்சிக்கும்போது இந்த மாற்றம் அறியப்படுகிறது. செய்தி பாண்டிய மன்னருக்குப் போகிறது. மன்னர் எல்லோரையும் விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்காததால் திரு #சொக்கநாதப் பெருமானிடமே முறையிடுகிறார். அப்போது #பெருமான் வெளிப்பட்டு, எல்லோருக்கும் காட்சி தந்து, நடந்ததை விவரித்து, அனைவருக்கும் அருள்புரிகிறார்!!

(அந்த காணொளியில் பேசியவரின் பேச்சு மிக அருமையாக இருந்ததால் காண்போரை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கும். ஆனால், கதை சரியா? “பாரம்பரிய கதைகள் பாரம்பரிய கதைகளாகவே இருக்க வேண்டும்; அவற்றை ஆராயக் கூடாது.” என்ற கருத்துடையவர்கள் மேற்கொண்டு படிக்கத் தேவையில்லை. நன்றி.)

oOOo

💥 அந்த காணொளி பற்றிய எனது கருத்து:

காடுவெட்டி என்ற பட்டத்திற்கு உரியவர் கரிகாலச் சோழன். இன்று தொண்டை மண்டலம் என்றழைக்கப்படும் பகுதி அன்று பெருங்காடாக இருந்தது. அக்காடுகளை அழித்து தொண்டை மண்டலத்தை உருவாக்கினார். (இன்று காடுகளை அழிப்பதை எதிர்ப்போம். ஏனெனில், காடுகளின் பரப்பளவு குறைவு, மக்கள் தொகை மிக அதிகம். ஆனால், அன்று நிலைமை நேர் எதிர். காடுகளின் பரப்பளவு மிக அதிகம்; மக்கள் தொகையோ மிகக்குறைவு. கரிகாலன் காலத்தில் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையே சுமார் 10 லட்சம் தான்!! 😍) இதனால்தான், எத்தனை படையெடுப்புகள் நிகழ்ந்த போதும், அரசாளும் உரிமையை இழக்கும் வரை, இந்தப் பகுதி சோழர்களிடமே இருந்தது. இந்தக் கதை அவர் காலத்தில் நடந்ததாக தெரியவில்லை. அவரின் நினைவாக பிற்காலத்தில் வந்த மன்னர் யாரேனும் அந்தப் பெயரை வைத்துக் கொண்டிருக்கலாம்.

இது போன்ற கதைகள் வைணவத்தை எதிர்கொள்வதற்காக எழுதப்பட்டவை என்பது எனது கருத்து.

இன்று பெரும்பாலானோருக்கு இறை, கும்பிடுதல், மெய்யறிவு, வடக்கிருத்தல், பிறப்பறுப்பு என எதற்கும் சரியான பொருள் தெரியவில்லை. ஆனால், அன்று இப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை. சரியான பொருள் தெரிந்த மன்னர் திரு சொக்கநாதப் பெருமானைத் 🌺🙏🏽தேடிப் போகத் தேவையில்லை. திரு தழுவக்குழைந்தப் பெருமானே 🌺🙏🏽 அவருக்குப் போதும். மதுரையம்பதிக்கு எந்த விதத்திலும் குறையாதது கச்சியம்பதி!

மேலும், செல்லும் போது, வெள்ளப்பெருக்கு எடுத்த வைகைநதி குறுக்கிட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பழந்தமிழர்கள் வானிலையியல் வல்லுநர்கள். பாண்டியநாட்டின் வானிலையை மன்னர் அறிந்திருப்பார். எப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதையும் அறிந்திருப்பார். எனவே, “வெள்ளம் வரும் சமயம் தெரியாமல போய் சேர்ந்தார்” என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அடுத்தது, வடக்கு வாசல். இன்று இருக்கும் கோயில் திருமலை நாயக்கரின் காலத்தில் இறுதியானது. இந்த சமயத்தில் சோழர்களே கிடையாது. இக்கதை அதற்கு முன்னர் நடந்திருக்க வேண்டும். காடுவெட்டி சோழரின் காலத்தில் கோயில் சற்று சிறியதாக இருந்திருந்தாலும், கோயிலைச் சுற்றி மக்கள் வாழ்ந்திருப்பர். நடுநிசி நேரம், கனமான இலுப்பை மரக்கதவுகளை, யாரும் அறியாவண்ணம், ஒசையில்லாமல் திறந்து மூட முடியாது. மன்னருக்காக அவ்வளவும் செய்த இறைவன், முத்திரையை மட்டும் ஏன் மாற்ற வேண்டும்? இறைவன் என்ன சில ஆட்சியாளர்களைப் போன்று புகழ் விரும்பியா? மறு நாள் எல்லோரும் இதைப் பற்றி பேசவேண்டும், தான் காட்சி கொடுத்து தனது பெருமையை தானே பறைசாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு!

இறுதியாக. நமது மன்னர்கள் காட்டுமிராண்டிகள் அல்லர். வழிபாட்டிற்கு வந்த எதிரிக்கும் வழி கொடுத்தனர். #வரகுணப் #பாண்டிய #மன்னன் #திருக்கைலாயக் #காட்சி கண்டது #திருவிடைமருதூர் என்னும் சோழநாட்டுத் திருத்தலத்தில். இதன் பிறகு அவர் அந்த திருத்தலத்திற்கு பல திருப்பணிகளை செய்துள்ளார். அச்சமயம் பல்லவர்-சோழர்களின் கைகளே ஓங்கியிருந்தது.

ஒரு சமயம், திரைக்கதையையும் உரையாடலையும் மட்டும் நம்பி திரைப்படமெடுக்கும் ஒரு இயக்குனர், தனது படத்தில் கவுண்டமணியைச் சேர்த்தார். ஏன் என்று கேட்டதற்கு, அவர் சொன்ன பதில், “என்ன செய்வது? இன்று குத்துப்பாட்டு, கவுண்டமணி காமெடி போன்ற சமாச்சாரங்கள் இல்லாமல் படங்கள் வருவதில்லை. அப்படி எடுத்தால், அவற்றை வினியோகஸ்தர்கள் வாங்குவதில்லை. எனவே, கவுண்டமணியைச் சேர்த்தேன்.”

இது போன்றொரு நிலை தான் சைவத்திற்கும் ஏற்பட்டிருக்கிறது என்பது என் கருத்து. சரக்கில்லாததால், திவ்ய அலங்காரம், பெரிய நாமம், விஸ்வரூபம், லட்டு, வடை, தோசை, இட்லி, பக்திரசம் சொட்டும் (!?) கதைகள் என்று மக்களை மாக்களாக்கி நாம மதம் வேரூன்ற ஆரம்பித்ததால் சைவமும் சற்று இறங்கி வர வேண்டியதாயிற்று. ஒரு விதத்தில் இது பரவாயில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். எதிரே நாமம் இல்லாமல், “2000 வருசத்துக்கு முன்னாடி உன்ன கொன்னுட்டாங்களேய்யா!” கூட்டமோ, குட்டிச்சுவற்றிற்கு முன் பஸ்கி எடுக்கும் கூட்டமோ இருந்திருந்தால்… 🤢🤮🤒

oOOo

ஆன்மிக கதைகள், உவமைகள் எல்லாம் மக்களின் நற்சிந்தனையைத் தூண்ட வேண்டும். பகுத்தறிவை வளர்க்க வேண்டும் (எனில், வளர்த்த மகளை மணப்பதல்ல 👊🏽; பொய் பொருள்களிலிருந்து மெய்ப்பொருளை பிரித்தறிவது). ஒப்புவித்து வாழும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். தீயதை எதிர்த்துப் போராடும் மனவலிமையை பெருக்க வேண்டும்.

நமது #பழம் #பெரும் #தலங்கள் #யாவும் #மாமுனிவர்களின் #சமாதிகள்! 🌺🙏🏽 மெய்யறிவு பெற அவர்கள் கண்டுணர்ந்து அறிவித்த வழிகளை பெயர்களில், உருவங்களில், தலவரலாறுகளில், திருவிழாக்களில் என பல இடங்களில் பதிவிட்டுள்ளனர் நம் முன்னோர்கள். காடுவெட்டி சோழ மன்னர், “#தழுவக்குழைந்தப் #பெருமான் – #காமாட்சி #அம்மன்” என்ற பெயர்களை ஆராய்ந்திருந்தாலே போதும். மதுரையை நோக்கி ஓடத் தேவையில்லை. இவ்வாறே, மதுரையில் இருப்போர், “#கால் #மாறி #ஆடிய #தலம்”, “#மீனாட்சி #அம்மன்” என்ற பெயர்களை ஆராய்ந்தாலே போதும். வேறெங்கும் போகத் தேவையில்லை.

ஒரு முறை, #பகவான் திரு #ரமண #மாமுனிவரை 🌺🙏🏽 சந்திக்க ஒரு ஐரோப்பியர் வந்திருந்தார். அவரிடம் பேசும் போது, “கப்பல், தொடரி, மாட்டுவண்டி என பயணம் செய்து வந்தது உனது உடல். நீ எங்கும் போகவில்லை. நீ அப்படியே தான் இருக்கிறாய். இவைதான் திரைப்பட காட்சிகள் போல் உன் முன்னே நகர்கின்றன.” என்று கூறினார்!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

Talk #582: A Rarest Gem from Bhagavaan Thiru Ramana Maharishi!! 🌺🙏🏽

One of the very rarest gems 👌🏽😍 from #Bhagavaan Thiru #Ramana Maharshi:

If one goes on wanting, one’s wants cannot be fulfilled. Whereas if one remains desireless anything will be forthcoming. We are not in the wife, children, profession, etc.; but they are in us; they appear and disappear according to one’s prarabdha.

The mind remaining still is samadhi, no matter whether the world is perceived or not.

Environment, time and objects are all in me. How can they be independent of me? They may change, but I remain unchanging, always the same. The objects can be differentiated by means of their names and forms, whereas each one’s name is only one and that is ‘I’. Ask anyone, he says ‘I’ and speaks of himself as ‘I’, even if He is Isvara. His name too is ‘I’ only.

So also of a locality. As long as I am identified with the body so long a locality is distinguishable; otherwise not. Am I the body? Does the body announce itself as ‘I’?

Clearly all these are in me. All these wiped out entirely, the residual Peace is ‘I’. This is samadhi, this is ‘I’.

— Talk #582, #Talks #with #Maharishi

🌺🙏🏽

Thy Will, O Lord, Be Done!! 😁

The following passage from “#Talks #with #Maharshi” was directly aimed at the #Sunday #Opera #Community 😁:

#Talk #594

#Bhagavaan Thiru #Ramana Maharshi said: They pray to God and finish with “Thy Will be done!” If His Will be done why do they pray at all? It is true that the Divine Will prevails at all times and under all circumstances. The individuals cannot act of their own accord. Recognise the force of the Divine Will and keep quiet. Each one is looked after by God. He has created all. You are one among 2,000 millions. When He looks after so many will He omit you? Even common sense dictates that one should abide by His Will.

Again there is no need to let Him know your needs. He knows them Himself and will look after them.

Still more, why do you pray? Because you are helpless yourself and you want the Higher Power to help you. Well, does not your Creator and Protector know your weakness? Should you parade your weakness in order to make Him know it?

👊🏽👊🏽👊🏽👊🏽👊🏽

Like the Chinese-made COVID-19, this praying syndrome has affected the entire H. sapiens species!!

அண்ணாமலை வெண்பா திரட்டு – பாடல் #42 – வைரவர் – சிறு விளக்கம்

பிள்ளை அறுத்துஉதவும் பேரா ளனைஉவந்து
கொள்ள வயிரவமெய்க் கோலமாய் – மெள்ள
நடந்தமலை சிம்புளாய் நாரசிங்க ரூபை
அடர்ந்தமலை அண்ணா மலை

— #அண்ணாமலை #வெண்பா – #42

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸பிள்ளை அறுத்து…மெள்ள நடந்தமலை

(இதன் விளக்கம் சற்று நீண்டுவிட்டது. தயவு செய்து பொறுமையாக படிக்கவும். நன்றி.)

#சிறுத்தொண்ட #நாயனாரின் 🌺🙏🏽 கதை. அனைத்து நாயன்மார்கள் கதையும் உண்மையல்ல. சில கதைகள் உருவகக்கதைகள். இக்கதையும் அப்படிப்பட்ட ஒன்று தான்.

முதலில் இப்பாடலில் வரும் வயிரவமெய் கோலம்.

#வயிரவர், #வைரவர், #பைரவர், #வைராகி, #பைராகி எல்லாம் வைராக்கியம் நிறைந்தவர் என்பதைக் குறிக்கும். எனில், “தன்னை விடாதிருத்தவர்” என்று பொருள். தன்மையுணர்வை விடாது இறுகப்பற்றுபவர். இவ்வுணர்வுக்கு அந்நியமான எதையும் நாடாதவர். “தன்னை விடாதிருத்தல் மெய்யறிவு. அந்நியத்தை நாடாதிருத்தல் நிராசை. உண்மையில் இரண்டும் ஒன்றே.” என்பது பகவானின் 🌺🙏🏽 வாக்கு. அதாவது, வைரவர் எனில் மெய்யறிவாளர்!!

இவருக்கு ஊர்தியாக நாயைக் கொடுத்துள்ளனர் நம் முன்னோர்கள். ஏன் நாயை ஊர்தியாக வைத்தனர் என்பதை ஆராயும் முன்னர் புலியைப் பற்றி பார்ப்போம்.

சிவபெருமான் இடையில் புலித்தோலை உடுத்தியிருப்பது போன்று சித்தரித்திருப்பர். மாமுனிவா்கள், ஆதீனங்கள், ஆச்சார்யார்கள், மடாதிபதிகள் புலித்தோலின் மீது அமர்ந்திருப்பது போன்று ஓவியம் வரைந்திருப்பார்கள்; படம் எடுத்திருப்பார்கள். தில்லை தலவரலாற்றோடுத் தொடர்புடைய #புலிக்கால் #முனிவரை (#வியாக்ரபாதர்) 🌺🙏🏽 புலியின் கால்களை உடையவராகவே சித்தரித்திருப்பர். இவையெல்லாம் ஒரு பொருளையேக் குறிக்கின்றன: சித்தரிக்கப்பட்டவர் தனது தன்மையுணர்வில் நிலைபெற்றவர். அந்நிலையை சிறிதும் விடாது இறுகப்பற்றிக் கொண்டிருப்பவர். புலிவாயிற்பட்டது எவ்வாறு திரும்பாதோ அவ்வாறே தன்மையுணர்வில் நிலைபெற்ற இவர்கள் உலக வாழ்க்கைக்கு திரும்பமாட்டார்கள்.

(அரசர்கள் வீற்றிருந்த அரியணைகளின் கால்களையும், நமது வீடுகளின் வரவேற்பறைகளில் அன்றிருந்த மரநாற்காலிகளின் முன்னங்கால்களையும் புலிக்கால்கள் போன்று செதுக்கியிருப்பார்கள். இதன் பொருள், இவற்றில் வீற்றிருப்போர் தமது நிலைப்பாட்டில் உறுதியாயிருப்பர் என்பதாகும்.)

இனி, வைரவரின் ஊர்திக்கு திரும்புவோம். மேற்கண்ட புலிக்கால், புலித்தோல் போன்ற அடையாளங்களுக்கு சமமான அடையாளம் தான் நாய். நாய் என்றதும் நம் நினைவுக்கு வருவது அதன் மோப்ப ஆற்றல் மற்றும் அதன் நன்றியுணர்ச்சி. நாயானது, எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தனது உரிமையாளரை சரியாக மோப்பம் பிடித்துக் கண்டுபிடித்து விடும். இவ்வாறே, ஒவ்வொரு விநாடியும் வெளிப்படும் பல பல வாசனைகளுக்கு (எண்ணங்களுக்கு) இடையில் தன்மையுணர்வு எனும் இறையுணர்வை மோப்பம் பிடித்தவர்கள் வைரவர்கள். கொடூர “ஊனவினைக்காடு” எனப்படும் உலகிலிருந்து தப்பிக்க வழி காட்டிய தனது மெய்யாசிரியரை என்றும் மறவாதவர்கள்.

(மெய்யாசிரியர் என்பவர் மனித உரு கொண்டு தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. சொல், சொற்றொடர், பொருள், நினைவு, காட்சி, விலங்கு, மனிதன் என்று எது/யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.)

இப்படி, வைரவர் என்பதற்கு மேலான விளக்கமிருந்தும், எங்கேயோ தவறு நடந்து, அவர்களை பயங்கரமானவர்கள் என்று சித்தரித்து விட்டனர். விளைவு, ஒரு பயங்கரமான கூட்டமே காசி மாநகரில் உருவாகிவிட்டது!! மேலும், இக்கதை வடநாட்டுக்கு ஏற்றுமதியாகி, பின்னர், அங்கிருந்து வைணவத்திற்கு இறக்குமதியும் ஆகிவிட்டது! கதையின் தாக்கம் அத்தகையது. இந்நேரம் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கும் பரங்கி மதத்தவரால் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கும் என்று உறுதியாக நம்பலாம். 😊

(வைணவர்களின் #பன்றி #திருவிறக்கமும் (#வராக #அவதாரம்) மோப்ப ஆற்றலை அடிப்படையாகக் கொண்டதுதான். பன்றியானது மோப்பம் பிடித்து, மண்ணைப் பறித்து புதைந்திருக்கும் கிழங்கை வெளிக்கொணரும். இவ்வாறே பன்றிப்பெருமாள் கடலுக்குள் புதைந்து போயிருக்கும் நிலமகளை மோப்பம் பிடித்து வெளிக்கொணருவார். இங்கு கடல் என்பது நமது உடல், வெளிவரும் நிலமகள் என்பது நமது தன்மையுணர்வு. எனில், பன்றிப்பெருமாள்… நாமே #பன்றிப்பெருமாள்!! 😊 மோப்ப ஆற்றலைப் பொறுத்த வரை நாய்க்கு தான் முதலிடம். பின்னர் தான் பன்றி வரும். சைவர்கள் நாயை முதலில் பயன்படுத்திக் கொண்டதால், வைணவர்கள் பன்றியை எடுத்துக்கொண்டனர்.)

இனி, நாயனாரின் கதைக்கு திரும்புவோம்.

வைரவர் எனும் மெய்யறிவாளர் பிள்ளைகறி கேட்டிருக்க முடியுமா? திருஞானசம்பந்தரின் திருச்செங்காட்டங்குடி திருப்பதிகத்தில் இடம் பெறும் பேறுபெற்ற சிறுத்தொண்ட நாயனார் தான் மூடராக இருக்க முடியுமா?

இங்கு பிள்ளையெனில் மனது! “சுத்த அறிவிலிருந்து அகந்தையும், அதனின்று மனதும், மனதிலிருந்து எண்ணங்களும், அவற்றிலிருந்து பேச்சும் பிறக்கின்றன. ஆகவே, பேச்சென்பது ஆதிமூலத்தின் கொள்ளுப்பேரனாகும்.” என்பது பகவானது வாக்கு. ஆக, அகந்தையாகிய நாமெல்லோரும் இறையின் பிள்ளைகள். நமது மனம் நமது பிள்ளை.

ஆன்மிக கதைகளில் வரும் “உனது மகனை பலியிடு”, “குழந்தையை பலியிடு”, “கன்னியை எனக்கு கொடு” போன்ற சொற்றொடர்கள் எல்லாம் மனதை அழிப்பதையேக் குறிக்கின்றன. இது போன்ற உவமைகள் ஏடாகூடமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று நினைத்த சில பெரியோர்கள், இதற்கு மாற்றாக சொன்னது தான்: #கிடா #வெட்டு!!

ஆம், கிடா முருகப்பெருமானின் ஊர்திகளில் ஒன்று. மனதைக் குறிப்பது. நம்மூர் திருவிழாக்களில் “கிடா வெட்டினேன்”என்று மட்டும் சொல்ல மாட்டார்கள். “கிடா வெட்டி, பொங்கல் வெச்சு, எல்லாருமா சாப்பிட்டோம்”, “கிடா வெட்டி, படையல் செஞ்சு, எல்லாருக்கும் குடுத்தோம்” என்றே கூறுவார்கள். கிடா வெட்டுதல் மனதை அழிப்பதைக் குறிக்கும். மனம் அழிந்த பின் மீதமிருப்பது என்ன? மெய்யறிவு. இதனுடன் வெளிப்படுவது – பேரமைதி, எல்லையில்லா பெருமகிழ்ச்சி மற்றும் குளுமை. இவற்றைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதே பொங்கலையும் படையலையும் பகிர்ந்து உண்ணுதல். 👏🏽👏🏽👏🏽👌🏽😍

நமது திருவிழாக்கள் எவ்வளவு பொருள் பொதிந்தனவாக இருந்திருக்கின்றன!! நமது சமூகங்கள் எவ்வளவு ஆன்ம தாகம் கொண்டவையாக, பண்பட்டவையாக இருந்திருக்கின்றன!! 😍 நாம் பழங்குடிகள் என்பதற்கும் இந்த திருவிழாக்கள் ஒரு எடுத்துக்காட்டாகும்.

மீண்டும் ஒரு முறை… நாயனார் கதையில் வரும் வைரவர் என்பவர் மெய்யறிவாளர். இவர் கேட்ட பிள்ளைகறி என்பது நாயனாரின் மனது. நாயனாரின் அறியாமையை அகற்றி, அவரை நிலைபேற்றில் நிற்கச் செய்ய வந்தவர். 🌺🙏🏽 “பேராளனை (நாயனாரை) உவந்து கொள்ள வந்தவர்” (இந்த வெண்பாவில் வரும் சொற்றொடர்).

🔸சிம்புளாய் நாரசிங்க ரூபை அடர்ந்தமலை

இறைவன் சிம்புள் (#சரபேசுவர) வடிவம் தாங்கி வந்து சிங்கப்பெருமாளை அடக்கிய கதை. இரணியனை (ஆணவத்தை) அழிக்க சிங்கப் பெருமாள் (நம்மைப் பற்றிய தெளிவு) தோன்றுவது வரை நிர்விகற்ப சமாதி எனில், அதன் பிறகு உலக வாழ்க்கை திரும்புவது #சிம்புள் #பெருமான் தோன்றுவதாகும். சிம்புள் பெருமானின் 8 கால்கள் – 8 திசைகள் மற்றும் அவரது 2 தலைகள் – நமது அகம் & நமது புறம். அதாவது, இயல்பு வாழ்க்கை. காண்பதும், கேட்பதும் பொய்யென்றாலும், அவற்றை நம்மால் தோற்றுவிக்க முடியுமா? முடியாது. இறையாற்றலால் தான் முடியும். அவ்வாற்றலே இங்கு சிம்புள் பெருமானாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#சிறுத்தொண்டர்
#சிறுத்தொண்ட #நாயனார்
#சீராளன்
#நரசிம்மர் #நரசிங்கம்
#சிங்கப்பெருமாள்

அண்ணாமலை வெண்பா திரட்டு – பாடல் #40: திருவைந்தெழுத்து – சிறு விளக்கம்

அனைத்துலகும் போற்றுதிரு ஐந்தெழுத்தை ஓதித்
தனைத்தொழுது பேணும் தவத்தோர் – நினைத்தவரம்
நல்குமலை எந்நாளும் நல்லோரும் நன்னெறியும்
மல்குமலை அண்ணா மலை

— #அண்ணாமலை #வெண்பா – #40

🙏🏽🌷🌸🌼🌻🏵️💮🌷🙏🏽

🔸#திருவைந்தெழுத்து

அருளாளர்கள் பலராலும் போற்றப்பட்ட ந, ம, சி, வா, ய ஆகிய 5 திருவெழுத்துகள். திருஞானசம்பந்தர் 🌺🙏🏽 பாடிய கடைசி திருப்பதிகம் (காதலாகி கசிந்து…) முடிவதும் இவற்றுடன் தான். “நாதன் நாமம் நமச்சிவாயவே” என்று மெய்ப்பொருளின் பெயரே இவ்வைந்தெழுத்துதான் என்று முடிக்கிறார்!

ந – இல்லை
ம – நான்
சி – அழியாதது. மாறாதது. தேயாதது. வேறெது? மெய்ப்பொருள்.
வா – வீசும்
ய – ஒளி

பொருள்: எதுவும் நானில்லை. எல்லாம் மெய்ப்பொருளின் வெளிப்பாடே. 🌺🙏🏽

தொடர்ந்து சிந்திப்பதால் கிடைக்கும் பயன்: ஆணவம் அழியும். ஒப்புவித்து வாழும் மனப்பான்மை பெருகும். இறுதியில், நிலைபேற்றில் முடியும்.

தமிழிலும் சரி, ஆரியத்திலும் சரி இவ்வைந்தெழுத்து சொல் என்று அழைக்கப்படுவதில்லை. ஐந்தெழுத்து என்றே அழைக்கப்படுகிறது. மேற்சொன்ன பொருள் தவிர, இவ்வெழுத்துகளுக்கு பல பொருள்கள் உண்டு. இவை ஐம்பூதங்களையும் குறிக்கும். இறைவனது ஐந்தொழில்களையும் குறிக்கும். சற்று மாற்றினாலும் பொருள் முற்றிலும் மாறிப்போகும்.

🔹#சிவாயநம – மேற்கண்ட நமசிவாய வரிசைக்கு எதிர்பொருளைக் கொடுக்கும். “எல்லாம் நீயே” என்பது போய் “எல்லாம் பொய். நான் மட்டுமே மெய்.” என்ற பொருளைக் கொடுக்கும். பகவானும் 🌺🙏🏽, பல இடங்களில், “நீ காண்பதும் கேட்பதும் பொய். நீ மட்டுமே மெய்.” என்று அறிவுறுத்தியுள்ளார்.

“சிவாயநம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை” என்பது புகழ்பெற்ற வசனம். தானே தானாய் இருப்போரை யார்தான் எதுதான் என்னதான் செய்துவிடமுடியும்? எனவே, அபாயம் ஒருநாளும் இல்லை!!

🔹#சிவசிவ – முதல் சிவ மெய்ப்பொருளையும், இரண்டாவது சிவ அதிலிருந்து வெளிப்பட்ட அனைத்தையும் குறிக்கும். இரண்டுமே சமமானது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்னும் முழுமை முழுமையாகவே இருக்கிறது என்ற திருமறைச் சொற்றொடருக்கு சமமானது. அம்மையப்பன், மாதொருபாகன், சங்கரநாராயணன் போன்ற இறையுருவங்கள் இதன் உருவ வடிவம்.

🔹சிவ – அழியாதது. மாறாதது. தேயாதது. வலிமையானது. நல்லது.

🔹சி – மெய்ப்பொருள் மட்டுமே. “நான் என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாத இடமே மெளனம் (மெய்ப்பொருள்) எனப்படும்” என்கிறார் பகவான்.

oOOo

அக்கரம் அதோர் எழுத்தாகும் இப்புத்தகத்தோர்
அக்கரமாம் அஃதெழுத வாசித்தாய் – அக்கரமாம்
ஒரெழுத்து என்றும் தானாய் உள்ளத்தொளிர்வதாம்
ஆரெழுத வல்லார் அதை

இப்பாடல், யோகி ராமைய்யா என்ற அன்பர் கேட்டுக்கொண்டதற்காக, அவரது காகிதப் புத்தகத்தில் பகவான் எழுதிக் கொடுத்தது. #அக்கரம் என்பது #அக்ஷரம் என்ற ஆரிய சொல்லாகும். இதற்கு எழுத்து & அழியாதது என்று 2 பொருள்கள் உள்ளன.

பொருள்: அக்கரம் என்பது ஓர் எழுத்தாகும். இந்த காகிதப் புத்தகத்தில் நான் எழுதிய அக்கரத்தை வாசித்தாய். ஆனால், என்றும் அழியாத ஓர் அக்கரம் எல்லோர் உள்ளத்திலும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. யாரால் அதை எழுத முடியும்? (யாராலும் எழுத முடியாது. அதுவாய் ஆகத்தான் முடியும் என்பது கருத்து.)

பகவான் குறிப்பிடும் அழியாத அவ்வெழுத்து எது? மேற்கண்ட ‘சி’ என்ற திருவெழுத்து உணர்த்தும் மெய்ப்பொருளே அது!!

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮

#குருநமச்சிவாயர்
#பகவான் #ரமணர்
#ஐந்தெழுத்து #நமசிவாய