Monthly Archives: July 2022

பெருமாளே பயந்துபோய் எங்க பின்னாடி ஒளிஞ்சிண்டிருக்கார்!!

படத்தைப் பார்த்ததும் “அடப்பாவிகளா!” என்ற உணர்வுதான் எனக்கு உடனடியாகத் தோன்றியது. ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, இப்போது, பெருமாளையே கடித்திருக்கிறார்கள்! 😡

இவர்களது (நாமப்பேர்வழிகள்) கணக்கின் படி, நிலையற்ற பொருளை குறிக்கும் பெருமாள்தான் அனைத்திற்கும் மூலப் பொருளாகிறார். எனில், மூலப்பொருளால் இவர்களா? அல்லது, இவர்களால் மூலப்பொருளா? இவர்களால்தான் மூலப்பொருள் காக்கப்படுகிறதெனில், அப்படிப்பட்ட இரண்டாந்தர பொருளை நாம் ஏன் வணங்கவேண்டும்? நாமப்பேர்வழிகளையே வணங்கிவிட்டுப் போகலாமே!

பெருமாள் என்பது ஒரு கற்சிற்பம் மட்டுந்தானா? அதன் கீழ் திருநீற்று (சமாதி) நிலையிலிருக்கும் திரு கொங்கணவ சித்தரைக் 🌺🙏🏽🙇🏽‍♂️ குறிக்கும் அடையாளமல்லவா!

அடுத்தது, திரு கொங்கணவ சித்தரென்பவர் யார்? நம்மைப் போல் அழியும் உடல் தாங்கியவரா? “நான் இன்னார்” என்ற எண்ணம் கொண்டவரையா நம் முன்னோர்கள் வணங்கச் சொன்னார்கள்? கொங்கணவர் தனது உடலைத் தாண்டியவர். தான் ஓர் அழியும் உடலல்ல என்ற மெய்யறிவைப் பெற்றவர். அவ்வறிவிலே நிலைபெற்றவர். மாசிலாமணி.

காட்டுமிராண்டிகளும், நரித்துவ கொடூர வாஸ்கோடகாமாவும் செய்ததுபோல் பெருமாள் சிலையை உடைத்தெறிந்தாலும், காட்டுமிராண்டி மாலிக்காபூர் செய்ததுபோல் கருவறையை அப்படியே பெயர்த்தெடுத்தாலும், வெட்கங்கெட்ட சமணர்களும், பேராசைப்பிடித்த பௌத்தர்களும் செய்ததுபோல் பெருமாள் சிலையை எடுத்துவிட்டு, அவர்களது சிலைகளை வைத்தாலும், உள்ளபொருளாய் சமைந்துள்ள கொங்கணவருக்கு ஏதுமாகிவிடாது!

பெருமாள் எனும் கற்சிலையை வணங்குவதென்பது கொங்கணவரை வணங்குவதாகும். கொங்கணவரை வணங்குவதென்பது அவர் காட்டிய வழியில் பயணித்து, அவரைப் போன்று மெய்யறிவில் நிலைபெறுவதாகும்.

oOOo

மால்தீர்ந்த கொங்கணவர் தாள் போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌼🌸🌼🌸

உலக புகழ் பெற்ற சபரிமலை திருக்கோவிலின் 18 படிகள் – சில குறிப்புகள்

https://youtu.be/4CD8rmy9ymc

மேலுள்ள இணைப்பில், சபரிமலை திருக்கோவிலின் கருவறை திறப்பிற்கு முன்னர், அதன் 18 படிகளுக்கு நடக்கும் பூசையைக் காணலாம். தயவு செய்து, காணொளியை முழுவதுமாகப் பார்த்துவிட்டு இடுகையை தொடரவும். நன்றி. 🙏🏽

🌷 இக்கோவிலின் நம்பிக்கை “இருமை” ஆகும். அதாவது, படைப்பின் மூலம் இரண்டு பொருள்கள் – அசைவற்றது & அசைவது – என்பது இவர்களது நம்பிக்கையாகும். இதற்கேற்றாற்போல் இருமுடி, ஒவ்வொரு படியிலும் இரு விளக்குகள், அவற்றை ஏற்றுவது இரு பூசாரிகள் என யாவும் இருமையாக உள்ளன.

🌷 ஆனால், படிகளைக் கடந்து சென்றால் நம் கண்களில் முதலில் தெரிவது “நீயே அது” (தத்வமஸி) என்ற ஆரிய சொற்றொடர். அதாவது, “நீயே உள்ளபொருள்” என்று ஒருமையில் முடித்துவிட்டார்கள்!!

🌷 18 படிகளில் ஏறுவதற்கு தலையாய தகுதி இருமுடியாகும். இருமுடியில் இருக்கவேண்டிய தலையாய பொருள் நெய் தேங்காயாகும்.

🔸 தேங்காய் – மனிதன் (குறிப்பாக, தலை. தலையில்தானே யாவும் இருக்கின்றன & நடைபெறுகின்றன!)

🔸 வெளிப்புறமுள்ள நாறுகள் முழுமையாக நீக்கப்பட்ட தேங்காய் – பற்றுகளை விட்டொழித்த மனிதன்

🔸 தேங்காயினுள் இருக்கும் நீர் – உலகியல் சிந்தனை

🔸 தேங்காயிலிருக்கும் நீரை வெளியேற்றிவிட்டு, நெய் கொண்டு நிரப்புதல் – உலகியல் சிந்தனையை விட்டொழித்து, உள்ளபொருளைப் பற்றி எந்நேரமும் சிந்தித்தல்

🔸 மொத்தத்தில், நெய் தேங்காய் – எந்நேரமும் இறை சிந்தனையில் மூழ்கியிருக்கும் முதிர்ந்த நபர். அதாவது, நெய் தேங்காயை எடுத்துக் கொண்டு 18 படிகளில் ஏறத்தொடங்கும் நபர் இருக்கவேண்டிய நிலை.

🌷 18 படிகள் உணர்த்தும் 36 மெய்ம்மைகள் (தத்துவங்கள்) யாவும் நமதுடலில் இயங்கிக்கொண்டிருப்பவை. எனில், இப்படிகளைக் கொண்ட கட்டுமலை நமதுடலுக்கு சமமாகும். படிகளை கடந்து கருவறையை அடைவதென்பது உடலை தாண்டி, இறைநிலையை அடைவதற்கு சமமாகும். உடலை தாண்டுவதென்பது “நாம் இவ்வுடலல்ல” என்ற உண்மையை உணர்வதற்கு சமமாகும். கருவறையை அடைவதென்பது “நானே உள்ளபொருள்” என்ற மெய்யறிவை பெறுவதற்கு சமமாகும்.

🌷 வழிபாட்டிற்கு பின்னர், நெய் தேங்காயிலுள்ள நெய்யை மூலவரின் முழுக்கிற்கு கொடுப்பதென்பது மெய்யறிவை பெற்ற பின்னர், இறை சிந்தனையையும் விட்டுவிடுவதற்கு சமமாகும். அதாவது, முனைப்பற்று இருத்தல் – வருவதை வரவிட்டு, போவதை போகவிட்டு, ஒரு பார்வையாளனாக மட்டும் இருப்பதற்கு சமமாகும்.

🌷 மீதமுள்ள தேங்காயை ஆழித்தீயில் இடுவதென்பது மீதமுள்ள வாழ்வை, மேற்சொன்னவாறு, வாழ்ந்து முடித்தலுக்கு சமமாகும். ஆழித்தீ என்பது காலத்திற்கு சமம். எல்லாவற்றையும் அழித்துவிடும். பற்றுகளை விட்டு, உடலை கடந்து, மெய்யறிவில் நிலைபெற்ற பின்னர் உடல் இருந்தாலென்ன? போனாலென்ன?

oOOo

சபரிமலை அண்ணல் திருவடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌼🌸🌸

திரு கண்ணப்ப நாயனார் வரலாற்றின் உட்பொருள்

செய்தியை படித்ததும், “ஓ! இந்த சிவலிங்கத்திலிருந்துதான் அன்று இரத்தம் வழிந்திருக்கிறது” என்று முடிவு செய்துவிடுவோம். 😊

உண்மை இதுவல்ல.

கல்லாலான ஒரு சிவலிங்க வடிவத்திருக்கு பூசை செய்வதற்காக, உயிரை பணயம் வைத்து, ஒரு சிவத்தொண்டர் காட்டிற்குள் சென்றுவந்திருக்கமாட்டார்.

லிங்கம் என்ற ஆரியச் சொல்லிற்கு பல பொருள்களுண்டு. அதிலொன்று, உடலாகும்.

> லிங்கம் = உடல்
> சிவன் = மெய்யறிவில் நிலை பெற்றவர்
> சிவலிங்கம் = மெய்யறிவாளரின் உடல்

திரு சேஷாத்திரி சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽‍♂️ போன்ற சித்து வேலைகளை செய்யும் ஒரு மெய்யறிவாளர் 🌺🙏🏽🙇🏽‍♂️ அக்காட்டிற்குள் வாழ்ந்திருக்கிறார். இதை தெரிந்துகொண்ட சிவத்தொண்டர், நாள்தோறும் அங்கு சென்று, அப்பெருமானுக்கு தேவையான தொண்டாற்றிவிட்டு வந்திருக்கிறார். திரு கண்ணப்ப நாயனாரின் 🌺🙏🏽🙇🏽‍♂️ பெருமையை அந்த சிவத்தொண்டரும், உலகமும் அறிவதற்காக, தன் கண்களில் இரத்தத்தை வெளிவர செய்து, திருவிளையாடல் புரிந்திருக்கிறார். அவர் திருநீற்று நிலை (சமாதி) அடைந்த பின்னர், அவரது உடலை புதைத்துவிட்டு, அதற்கு மேல் அடையாளமாக ஒரு சிவலிங்கத்தை வைத்துள்ளனர். அந்த சிவலிங்கத்தையே படத்தில் காண்கிறோம்.

திருவிளையாடல் புரிந்து நாயனாரையும், சிவத்தொண்டரையும் உய்வித்ததுபோல் நம்மையும் அப்பெருமான் உய்விக்கட்டும்! 🙏🏽

oOOo

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽🙇🏽‍♂️

🌸🌸🌼🌸🌸

பேரூர் திரு பட்டீசுவரர் திருக்கோவிலின் பொன் ஏர் திருவிழா

கோவை பேரூர் திரு பட்டீசுவரர் திருக்கோவிலில் பொன் ஏர் கொண்டு உழவு செய்து, நாற்று நடவும் திருவிழா அண்மையில் நடந்தது.

oOo

திரு பட்டீசுவரர் என்ற மூலவரின் கீழே திருநீற்று நிலையில் இருக்கும் பெருமான், உடல் தாங்கியிருந்த காலத்தில் உழவராக வாழ்ந்தவர். அவரை காண திரு சுந்தரமூர்த்தி நாயனார் வந்திருந்தபோது, அருகிலுள்ள வயலில், பட்டீசுவரப் பெருமானும் அவரது மனைவியும் உழவு செய்துகொண்டிருந்தார்கள். இவ்வரலாற்றை நினைவு கூறவே இந்த பொன் ஏர் திருவிழா!

மெய்யறிவும் வேலையும் ஒன்றுக்கொன்று எதிரானது என்ற கூற்று தவறென்பதை இந்த வரலாறு மெய்ப்பிக்கிறது.

“வேலை தடையல்ல. அந்த வேலையை செய்கிறவன் நான் என்ற எண்ணமே தடை.” என்பது பகவான் திரு இரமண மாமுனிவரின் வாக்கு.

🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️🌺🙏🏽🙇🏽‍♂️