Monthly Archives: November 2020

ஐப்பசி நிறைமதி நாள் & சோறு கண்ட இடம் சொர்க்கம்

(தஞ்சை பெருவுடையார் 🌺🙏🏽)

ஐப்பசி நிறைமதி நாள் – சிவத்திருத்தலங்கள் அன்னாபிஷேகம் காணும் நாள்! “நாம் காணும் இவ்வுலகம் உணவுமயம்” என்ற பேருண்மையை நமது முன்னோர்கள் உணர்ந்த நாள்!!

சிவ அடையாளத்தின் மீது கொட்டப்படும் (*) சோற்றிலிருக்கும் ஒவ்வொரு பருக்கையும் ஒர் உயிரை/உயிரினத்தைக் குறிக்கும். நுண்ணோக்கி வழியாக காண்பது போன்ற திறனைப் பெற்றிருந்தோமானால் நம் முன்னே கோடான கோடி உயிரிகள் ஒன்றையொன்று அண்டியும், சார்ந்தும், கொன்றும், தின்றும் வாழ்ந்து கொண்டிருப்பதைக் காணலாம். ஒர் உயிரியின் உடலோ கழிவோ இன்னோர் உயிரியின் உணவாக மாறுவதைக் காணலாம். நம் உடலுக்குள்ளும் இதே நிகழ்வு தான். மொத்தத்தில் எங்கும் உணவுமயம் தான்!

இந்த உண்மையை நமது முன்னோர்கள் ஒர் ஐப்பசி நிறைமதி நாளன்று உணர்ந்திருக்கிறார்கள். இவ்வுண்மையை உணர்வதால் அகந்தை அடங்குவதையும் / அழிவதையும் கண்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் உணர்ந்ததை அன்னாபிஷேகம் என்ற திருவிழாவின் மூலம் பதிவு செய்து, வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். இத்திருவிழா தமிழகத்திற்கே உரியதாவதால், ஒரு தமிழ் பெரியோனே மேற்கண்ட உண்மையை முதன்முதலில் உணர்ந்திருக்கிறார் என்று உறுதியாக கருதலாம்.

(* – ஒரு 25+ ஆண்டுகளாகத்தான் உணவுப்பண்டங்களைக் கொண்டு உடையவருக்கு ஒப்பனை செய்கிறார்கள். அதற்கு முன்னர், உடையவர் மேல் சோற்றைக் கொட்டிவிட்டு வெளியே வந்துவிடுவார்கள். திருவிழாவின் பெயர் அன்னாபிஷேகம். அன்ன அலங்காரமன்று.)

oOOo

எல்லாம் சரி. 1600களில் தான் உலகக் கொல்லிகளான பரங்கியர்களால் நுண்ணோக்கி “கண்டுபிடிக்கப்பட்டது”. எனில், எவ்வாறு “உலகம் உணவுமயம்” என்ற உண்மையை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்களால் உணரமுடிந்தது? ஹாலிவுட் திரைப்படங்களில் வருவது போன்று, 1600களில் வாழ்ந்த பரங்கியர்கள் நேரப்பயணத்தின் மூலம் முற்காலத்திற்கு சென்று காட்டுமிராண்டிகளாக இருந்த நமது முன்னோர்களுக்கு சொல்லிக் கொடுத்திருக்கவேண்டும். வேறு வழியே இல்லையல்லவா? 😁

oOOo

(கங்கை கொண்ட சோழபுர பெருவுடையார் 🌺🙏🏽)

சோறு எனில் வெந்த அரிசி என்பது இன்றைய பொதுவான பொருள். ஆனால், கம்பஞ்சோறு, பனஞ்சோறு (நுங்கு), கற்றாழைச் சோறு போன்ற பயன்பாடுகளும் உண்டு. இவற்றிலிருந்து சோறு எனில் “உள்ளிருப்பது. பக்குவமடைந்தது. நன்மை தரக்கூடியது.” என்று பொருள் கொள்ளலாம்.

இந்த கணக்கில், மேற்கண்ட நெல்லின் உமி, பனங்காயின் ஓடு, கற்றாழையின் தோலுக்கு நம் உடல் சமமானால், உடலின் உள்ளிருக்கும் ஆன்மா (தன்மையுணர்வு) சோறுக்கு சமமாகிறது. எப்போது? பக்குவமடைந்த பிறகு!

பக்குவமடைதல் என்றால் என்ன? நாம் இவ்வுடலல்ல என்பதை உணர்ந்து, நாம் யாரென்று தெளிந்து, நாம் நாமாக நிலை பெறுவதே பக்குவமடைதல். இவ்வாறு பக்குவமடைந்த பிறகு கவலை, துன்பம், தொல்லை என எதுவும் நம்மை அண்டாது. எப்போதும் பேரமைதியில் திளைப்போம். இந்நிலையை சொர்க்கம் என்று வைத்துக்கொண்டால், பக்குவமடைந்த நம்மை சோறு என்று வைத்துக்கொண்டால், நம்மை நாம் உணர்ந்த இடம் – நம்மை நாம் கண்ட இடம் – சோறு கண்ட இடம் சொர்க்கமாகிவிடுகிறது!! ☺️

தீதீல்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்

— திருத்தோணோக்கம், திருவாசகம

மேலுள்ள பாடலில் வரும் “சோறு பற்றினவா” என்ற சொற்களை மணிவாசகப் பெருமான் 🌺🙏🏽 பயன்படுத்திய விதத்தை வைத்து, இவ்விடுகையின் “சோறு” பகுதியை எழுதியுள்ளேன்.

(சோறு என்ற சொல்லுக்கு வீடு பேறு, நிலைபேறு, விடுதலை (ஆரியத்தில், முக்தி/மோட்சம்) என்ற பொருள்களும் உண்டு)

oOOo

ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி 🌺🙏🏽

கருணாகரமுனி ரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திருச்சிற்றம்பலம் 🌺🙏🏽

🌸🌼🌻🏵️💮