அஷ்டாவக்கிர கீதை #18.32 – சிறு விளக்கம் 🙏🏽

எனக்கு தெரிந்தவரொருவர், அஷ்டாவக்கிர கீதை என்னும் இரண்டன்மை நூலில் (அசுரத்தில், அத்துவைதம்), செய்யுள் 18.32ல் இருமுறை வரும் “dull-witted” என்ற சொற்றொடரைப் பற்றி கேட்டிருந்தார். அவருக்காக அடியேன் எழுதிய சிறு விளக்கம். 🙏🏽

oOo

🔸 அஷ்டாவக்கிர கீதை #18.32:

Hearing the ultimate Truth, the dull-witted man is bewildered. The wise man hearing the Truth retreats within and appears dull-witted.

🔸 தமிழ் மொழி பெயர்ப்பு:

அறியாமையில் இருப்பவர்கள், பேருண்மையைப் பற்றி கேட்டவுடன் திகைப்படைகிறார்கள். அறிவு முதிர்ந்தவர்களோ, கேட்டவுடன் தம்மில் நிலைபெற்று (தம்முள் ஆழ்ந்து), பைத்தியக்காரர்களை போன்று காட்சியளிக்கிறார்கள்.

– 1st dull-witted – அறியாமையில் இருப்பவர்கள்

– 2nd dull-witted – பைத்தியக்காரர்கள்

🔸 சில எடுத்துக்காட்டுகள்:

🌷 தொடக்க கால பகவான் திரு இரமண மாமுனிவர் – கல் போன்று தோற்றமளிப்பார். கல்லடிக்கு ஆளானார். 

🌷 பகவான் வரலாற்றில் வரும் திரு மஸ்தான் சுவாமிகள் – சோம்பி கிடப்பது போன்றிருப்பார். வேலை செய்யாமல் சும்மா இருப்பதற்காக இப்படி செய்கிறாரென்று கருதி, அவரது பெற்றோர்களே அவரை அடித்திருக்கிறார்கள்!!

🌷 திரு கரபாத்திர சுவாமிகள் – தனது இறுதி காலத்தில், அவரது அறையின் காலதர் (அசுரத்தில், சாளரம்) வழியாக, எப்போதும் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார்

🌷 திரு பூண்டி மகான் (திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள பூண்டி. சென்னைக்கு அருகிலுள்ள பூண்டி அல்ல. ) – ஒரு வீட்டுத் திண்ணையில் வந்து அமர்ந்தவர், உடல் இறக்கும் வரை அவ்விடத்திலிருந்து நகரவேயில்லை. அனைத்தும் அவ்விடத்திலேயேதான்!

🌷 திரு சதாசிவ பிரம்மேந்திரர் – ஆடையின்றி திரிந்தவர். ஏளனத்திற்கு ஆளானவர்.

🌷 தொன்ம கதைகளில் வரும், திரு ஜட பரதர் – இவரது இயற்பெயர் “பரதர்”. எப்போதும் கட்டை போன்று கிடந்ததால், “ஜட” என்ற அடைமொழி சேர்ந்துகொண்டது.

“இவ்வளவுதான் உண்மை” என்பதை உணர்ந்ததும், முதிர்ந்த நிலையில் இருப்பவர்கள் அப்படியே அடங்கிவிடுகிறார்கள். வருவதை வரவிட்டு, போவதை போகவிட்டு, நடப்பதை நடக்கவிட்டு, மனதில் சிறிதும் முனைப்பற்று இருப்பார்கள். அவர்களைப் பற்றி புரிந்து கொள்ளாதவர்கள், மேலும், மெய்யறிவு நிலையைப் பற்றி சிறிதும் அறியாதவர்கள், மேற்கண்ட பெருமான்களை பைத்தியக்காரர்கள், கிறுக்கர்கள், முட்டாள்கள் என்று கருதியிருப்பார்கள். சில சமயம், அவர்களது தோற்றத்தைக் கண்டு, அருவருப்பு அடைந்து, அவர்களை விரட்டவும் செய்வார்கள். அத்தகைய பெருமான்களையே “…retreats within and appears dull-witted” என்ற சொற்றொடர் குறிப்பிடுகிறது.

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

Leave a comment