மோடி ஜி, மோடி பாபா… சுவாமி மோடி? 🤭

“ஹிட்லர் உமாநாத்” என்ற திரைப்படத்தில் நடிகர் திலகமும், சுருளி ராஜனும் நடித்திருப்பார்கள். ஒரு தொழிற்சாலையில், கடைநிலை ஊழியராக தனது வாழ்வை தொடங்கும் சிவாஜி, தனது உழைப்பால், நேர்மையால் படிப்படியாக உயர்ந்து, அந்நிறுவனத்தின் முதலாளியாக ஆகிவிடுவார். சுருளிராஜனோ பின்வரும் வழியை தேர்ந்தெடுத்து, இறுதி வரை கடைநிலை ஊழியராகவே இருப்பார்:

– குடிசையில் வாழ்ந்து வந்த உமாநாத் பதவி உயர்வு பெற்றவுடன் புதிய வீட்டிற்கு குடி பெயர்ந்து விடுவார். அவரது குடிசைக்கு குடி வரும் சுருளிராஜன், “இந்த குடிசையில இருந்துதான் உமாநாத் உயரப் போனான். நானும் இங்கேயிருந்து, வாழ்க்கையில மேல போகப் போறேன்.” என்பார்!

– குடிசைக்குள் படுத்து கொண்டிருக்கும்போது, கூரையில் சொருகப்பட்டிருக்கும் ஓர் அலுமினியத் தட்டு அவரது கண்ணில் படும். அதையெடுத்து, “இதுல சாப்புட்டுத்தான் உமாநாத் மேல போயிருக்கிறான். நானும் இதுல சாப்பிட்டு மேல போகப் போறேன்.” என்பார்!

☺️

இது போன்று, “சுவாமி விவேகானந்தர் வடக்கிருந்த இடத்தில், நாமும் வடக்கிருந்தால், அவரைப் போல நாமும் புகழடைவோம்.” என்று நம்ம ஜி எண்ணிவிட்டார் போலிருக்கிறது! 😁

நம்ம ஜி ஏற்கனவே “வோர்ல்ட் ஃபேமஸ்” -தான். ஆனால், சுவாமிகள் போன்ற ஃபேமஸ் இல்லை. “ஏழு பிறவிக்கும் வில்லன்டா”-வகை ஃபேமஸ்!! 😄 அதை மாற்றுவதற்கான “சுருளிராஜன்” முயற்சியாக இப்போதைய வருகை இருக்கலாம்.

oOo

“தியானம்” என்ற அசுரச்சொல்லின் நேர் திருநெறியத் தமிழ்ச்சொல் “சிந்தனை” ஆகும்.

பகவான் திரு இரமண மாமுனிவரின் வாழ்விலிருந்து ஓர் அருமையான நிகழ்வு:

ஒரு நாள், ஓர் ஏழு வயது நிரம்பிய சிறுவன் பகவானிடம் வந்து, “பகவானே, எனக்கு சிந்திக்க (தியானிக்க) கற்றுத் தரவேண்டும். எனது வீட்டில் கேட்டால், ‘இப்போது அது பற்றி தெரிந்து கொள்ளத் தேவையில்லை. நேரம் வரும்போது தெரிந்து கொள்வாய்.’ என்கிறார்கள்.” என்று கூறினான். பகவானும், “சரி. இப்படி என் பக்கத்தில் அமர்ந்து கொள். நான் சொல்லிக் கொடுக்கிறேன்.” என்றார்.

சற்று நேரத்தில், ஓர் அன்பர் ஒரு வாளி நிறைய தோசைகள் கொண்டு வந்தார். எல்லோருக்கும் அவை பகிர்ந்து கொடுக்கப்பட்டன. ஒரு தோசையை எடுத்து, அச்சிறுவனிடம் கொடுத்த பகவான், “இதோ பார்! நான் விரலை உயர்த்தி, ‘உம்’ என்று சொல்லும் வரை சாப்பிட்டுக் கொண்டிருக்கவேண்டும். அதற்கு முன்னர் முடிக்கக்கூடாது. நான் சொல்லும் போது, தட்டில் மீதமும் இருக்கக் கூடாது.” என்றார். அதற்கு தலையாட்டிய சிறுவன், பகவானை பார்த்துக் கொண்டே சாப்பிடத் தொடங்கினான். தொடக்கத்தில், பெரிய பெரிய துண்டுகளாக சாப்பிட்டவன், பின்னர், சிறிய சிறிய துண்டுகளாக சாப்பிட்டான். பகவான் விரலை உயர்த்தி “உம்” சொன்னவுடன், மீதமிருந்த தோசைத்துண்டை வாயில் போட்டு முடித்துக்கொண்டான்.

அவனைப் பார்த்து பகவான் சொன்னார், “இப்போது நீ என்ன செய்தாயோ, அதற்கு பெயர்தான் சிந்தனை (தியானம்)! என் மீது கருத்தை வைத்துக்கொண்டு, செயலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாய். இதுபோன்று, உனது தன்மையுணர்வின் மீது கருத்தை வைத்துக் கொண்டு, அன்றாட வாழ்வை வாழ்ந்து கொண்டிரு.” 🌺🙏🏽🙇🏽‍♂️

oOo

மேற்கண்ட நிகழ்வை, உளுத்தறிவு கொண்டு ஏடாகூடமாக சிந்தித்தால், “ஒன்றை நினைத்து ஒன்றை செய்வதே சிந்தனையாகும் (தியானமாகும்)” என்ற முடிவு கிடைக்கும்! 😜 இது அப்படியே நம்ம ஜி-க்கு பொருந்தும்.

நம்ம ஜி-யின் 24×7 பணியோ நாட்டின் முதலமைச்சர். அவரது 24×7 சிந்தனையோ:

– வெளிச்சம் நல்லா விழுந்திருக்குமா

– கேமரா ஆங்கிள் சரியா இருக்குமா? 

– தலைமுடி சரியா படிஞ்சிருக்கா? 

– பளிச்சுன்னு இருக்கேனா?

– இதுக்கு எத்தன லைக் கிடைக்கும்?

இவ்வகையில், நம்ம ஜி எப்போதும் சிந்தனையில்தான் (தியானத்தில்தான்) இருக்கிறார்! 😃

oOOo

கருணாகரமுனி இரமணாரியன் அடி போற்றி 🌺🙏🏽🙇🏽‍♂️

திரு அறிவுவெளி 🌺🙏🏽🙇🏽‍♂️

🪻🌼🪷🌼🪻

Leave a comment